சென்னை: பணம் வாங்கிவரச் சொல்லி சித்ரவதை செய்த கணவன்? மனைவி எடுத்த விபரீத முடிவு
கணவன் பணம் கேட்டு சித்ரவதை செய்ததால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆவதால் ஆர்டிஓ விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை அம்பத்தூர், கள்ளிக்குப்பம், சக்தி நகர், முதல் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி (33). ஆவடி அருகே காட்டூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வரும் இவருக்கும், வித்யாகுமாரி (27) என்பவருக்கும் திருமணமாகி 5ஆண்டுகள் ஆகின்றன. இந்த தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர். வித்யாகுமாரிக்கு திருமணத்தின்போது 13 சவரன் தங்க நகைகளும், பைக் வாங்குவதற்கு ரூ.65 ஆயிரம் பணம் மற்றும் சீர்வரிசை பொருட்களும் வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், மனைவி வித்யாகுமாரியை அவரது பெற்றோரிடம் சென்று பணம் வாங்கி வருமாறு மூர்த்தி அடிக்கடி தகராறு செய்துள்ளாராம். மேலும், அவரை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. பின்னர், மூர்த்தி வீட்டில் இருந்து வேலைக்கு சென்றுவிட்டார். அதன்பிறகு, வித்யாகுமாரி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தகவலறிந்த அம்பத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வித்யாகுமாரியின் தாய் மீனாட்சி அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், எனது மகள் வித்யாகுமாரியிடம் கணவர் மூர்த்தி பணம் கேட்டு அடித்து உதைத்துள்ளார்.
இதன் காரணமாக, அவர் தற்கொலை செய்து கொண்டார். அவரது இறப்புக்கு காரணமான கணவர் மூர்த்தி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். அம்பத்தூர் போலீஸ் உதவி கமிஷனர் கனகராஜ் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வித்யாகுமாரிக்கு திருமணமாகி 5ஆண்டுகள் ஆவதால் அம்பத்தூர் ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகின்றனர்.