சென்னை | தொடங்க உள்ள மீன்பிடி தடைக்காலம் - காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் அலைமோதிய கூட்டம்
செய்தியாளர்: கிறிஸ்துராஜன்
வருகின்ற 15 ஆம் தேதி முதல் தமிழகத்தில் அனைத்து கடற்கரைப் பகுதிகளிலும் மீன ;பிடித் தடைக்காலம் தொடங்க உள்ள நிலையில், காசிமேடு மீன் பிடித் துறைமுகத்தில் மீன் பிரியர்கள் அதிகாலை முதலே குவிந்தனர் விசைப்படகுகள் மூலம் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் இன்று அதிகாலை கரை திரும்பிய நிலையில், மீன்களின் வரத்து அதிகமாகவே காணப்பட்டது.
பெரிய வகை மீன்களான வஞ்சிரம், வவ்வால், ஷீலா, சங்கரா, பாறை, திருக்கை, கொடுவா உள்ளிட்ட மீன்களின் வரத்து அதிகமாக இருந்தது. இதையடுத்து மீன் பிரியர்கள், மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள் ஆகியோர் தங்களுக்குத் தேவையான மீன்களை வாங்கிச் சென்றனர் அதேபோன்று மீன் பிடித் துறைமுகத்தில் சில்லறை விற்பனை கடைகளும அதிகமாகவே காணப்பட்டது.
மீன்களின் விலை நிலவரம்:
இன்று காசிமேடு மீன் பிடித் துறைமுகத்தில் மீன்களின் வரத்து அதிகமாக இருந்தபோதிலும் விலையும் உயர்ந்து காணப்பட்டது. அதில், ஒரு கிலோ வஞ்சிரம்-1000, கொடுவா 800, ஷீலா 500, பால் சுறா 500, சங்கரா 400, பாறை 400, இறால்-300க்கும் விற்பனையானது. அதேபோல், நண்டு -300, நவரை -300, பண்ணா-300, காணங்கத்தை -300, கடுமா- 300, நெத்திலி,-200க்கும் விற்பனையானது.