திருடனைப் பிடிக்க காவல்துறைக்கு உதவியவரின் குதிரை கழுத்தறுப்பு
சென்னையில் கார் கண்ணாடியை உடைத்து திருடியவர்கள் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுத்த நபருடைய குதிரையின் கழுத்து அறுக்கப்பட்டது.
சென்னை, திருவல்லிக்கேணி நடுக்குப்பம் 6வது தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ் (35). இவர் மெரினா கடற்கரையில் குதிரை சவாரி தொழில் செய்து வருகிறார். நேற்றிரவு வழக்கம் போல குதிரை சவாரி தொழிலை முடித்துவிட்டு வீடு திரும்பிய இவர், குதிரையை நடுக்குப்பத்தில் ஓரமாக நிற்க வைத்து விட்டு சாலையோரமாக உள்ள ஓட்டலில் சாப்பிட்டுள்ளார். பிறகு வந்து பார்த்தபோது குதிரை கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததுள்ளது. உடனே அவர் மெரினா காவல்துறைக்கு தகவல் கொடுக்க, காவலர்கள் வந்து குதியை வேப்பேரி கால்நடை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு குதிரைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது குதிரை நலமுடன் உள்ளது.
குதிரைக்கு பரிதாபமாக கழுத்து பகுதியில் 50 தையல் போடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சில உண்மைகள் தெரியவந்துள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன் நடுக்குப்பத்தைச் சேர்ந்த கோகுல் என்பவர் கார் ஒன்றின் கண்ணாடியை உடைத்து திருடிவிட்டு தப்பி ஓடியுள்ளார். அந்தத் திருட்டு தொடர்பான விசாரணையில் கோகுலை காவல்துறைக்கு ராஜேஷ் அடையாளம் காட்டியுள்ளார். அதன்மூலம் கோகுல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் பிணையில் வெளிவந்த கோகுல், ராஜேஷை கொலை செய்யத் தேடியுள்ளார். அப்போது ராஜேஷின் குதிரை கோகுல் கண்ணில் பட, அதன் கழுத்தை அறுத்துவிட்டு ஓடியுள்ளார் என காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. தற்போது தலைமறைவாக உள்ள கோகுலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். அத்துடன் அவரது நண்பர்கள் 5 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.