கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை
நாமக்கல் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜ். வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்த நிலையில், இருவரும் கோயிலுக்கு சென்றபோது 2015 ஜூன் 23-ஆம் தேதி மாயமானார். இதுதொடர்பாக, திருச்செங்கோடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்த நிலையில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜின் ஆட்கள் கோகுல்ராஜை கடத்தியதாக கூறப்பட்டது. இந்நிலையில், கிழக்கு தொட்டிப்பாளையம் ரயில் பாதை அருகே கோகுல்ராஜ் பிணமாக கிடந்தார்.
(கோகுல் ராஜ்)
இந்த கொலை சம்பவம் தொடர்பாக தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜ் உள்பட 17 பேர் மீது நாமக்கல் சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு தற்போது நாமக்கல் சிறப்பு நீதிமன்றத்தில்விசாரணையில் உள்ள நிலையில், இந்த வழக்கு விசாராணையை சேலம் சிறப்பு நீதிமன்றம் அல்லது வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி கோகுல்ராஜின் தாய் சித்ரா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
(யுவராஜ்)
இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட யுவராஜின் ஆதரவாளர்கள் மிரட்டலால், அரசுத் தரப்பு சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறி விட்டதாகவும், அதனால் நாமக்கல் நீதிமன்றத்தில் விசாரணை நியாயமாக நடக்காது என்பதாலும், கண்காணிப்பு கேமரா பதிவுகள் முறையாக நீதிமன்றத்தில் பதிவு செய்யப்படவில்லை என்பதாலும் வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டுமென மனுதாரர் சித்ரா தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து, நாமக்கல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதி, வழக்கு குறித்து நாமக்கல் சிபிசிஐடி போலீசாரும், குற்றம்சாட்டப்பட்ட யுவராஜ் உள்ளிட்ட 17 பேரும் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.