ஆயுள் கைதிகளை மணக்கும் பெண்களின் முடிவு சுயவிருப்பத்திலா அல்லது கட்டாயத்திலா?: நீதிமன்றம்
ஆயுள் கைதிகளை மணக்கும் பெண்களின் முடிவு சுய விருப்பத்திலா அல்லது கட்டாயத்தினாலா என கண்டறிவதற்கான நடைமுறையை மகளிர் ஆணையங்கள் உருவாக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் ஆயுள் தண்டனை கைதிகளில் சிலருக்கு விடுப்பு (பரோல்) கோரி அவர்களின் மனைவிகள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பல வழக்குகள் நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஆயுள் தண்டனை கைதிகள் பரோலில் வந்து திருமணம் முடித்து மீண்டும் சிறைக்கு சென்றுவிடும் நிலையில், அவர்களை மணக்கும் பெண்களின் மன உளைச்சல் மற்றும் உள்ளாக்கப்படும் சிரமம் குறித்த விவகாரத்தை நீதிபதிகள் கருத்தில் கொண்டனர். அதனடிப்படையில், ஆயுள் தண்டனை கைதிகளை மணமுடிக்கும் விவகாரத்தில், மணமகளின் சுய விருப்பத்தின் பேரில் ஒப்புதல் அளிக்கிறாரா அல்லது பல்வேறு மத மற்றும் சாதி ரீதியிலான நடைமுறை காரணமாக கட்டயபடுத்தபடுகிறாரா என ஆராய பெண்கள் ஆணையம் ஒரு நடைமுறையை உருவாக்க வேண்டுமென உத்தரவிட்டனர்.
சாதாரண வாழ்கை வாழும் ஆண்களை மணமுடிக்கவே தற்போதைய நிலையில் பெண்கள் பல நிபந்தனைகள் விதிக்கும்போது, ஆயுள் கைதியாக சிறையில் இருப்பவரை மணமுடிக்க எந்த பெண்ணும் முன்வர மாட்டார்கள் எனவும் உத்தரவில் சுட்டிகாட்டியுள்ளனர். ஒரு குற்றவாளியை மணம் முடிக்கிறாள் என்ற அவப்பெயரை சுமப்பதுடன் மட்டுமல்லாமல், அந்த பெண்ணின் வாழ்க்கை முடங்கி போவதுடன், உளவியல் ரீதியாகவும், உடலியல் ரீதியாகவும் பாதிக்கப்படுகிறார் என் நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மணமான ஒரு பெண்ணிற்கு கணவனின் துணை வாழ்க்கை முழுதும் தேவை என்பதையும் குறிப்பிட்டுள்ளனர்.
ஏற்கெனவே தமிழக அரசு எதிர் மனுதாரர்களாக உள்ள இந்த வழக்கில், தேசிய மற்றும் மாநில மகளிர் ஆணையங்களையும், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை செயலாளரையும் தாமாக முன்வந்து சேர்த்தனர். வழக்கு குறித்து மத்திய மாநில அரசுகளும், மகளிர் ஆணையங்களும் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஆகஸ்ட் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.