“பணியிட பாலியல் தொல்லைகளுக்கு கருணை காட்ட முடியாது” - உயர்நீதிமன்றம்
பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்களுக்கு கருணை காட்ட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை பூந்தமல்லியில் உள்ள பாய்லர் தொழிற்சாலையில் வெல்டராக பணியாற்றிய ஒருவர், தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அங்கு பணிபுரிந்த பெண் ஒருவர் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய ஆலை நிர்வாகம், வெல்டரை பணி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தொழிலாளர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட பெண் புகாரை திரும்ப பெற்றுவிட்டதாக கூறி மீண்டும் வெல்டரை பணியில் சேர்க்க உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து ஆலை நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யபட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், சில குடும்ப நிர்பந்தங்கள் காரணமாக புகாரை பெண் திரும்ப பெற்றுள்ளார் என்பதற்காக, பாலியல் தொல்லை குற்றச்சாட்டிற்கு ஆளானவரை விடுவித்தால் அது சமுதாயத்திற்கு தவறான செய்தியை கொண்டு சேர்க்கும் எனக் கூறினார். அத்துடன் அவரை பணியில் சேர்க்க வேண்டும் என தொழிலாளர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும் பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது வெட்கக்கேடான மனித உரிமை மீறல் என குறிப்பிட்ட நீதிபதி, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடரும் வரை, சமத்துவம் மற்றும் வளர்ச்சி அடைந்து விட்டதாக உரிமை கோர முடியாது என குறிப்பிட்டார். பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் கடமை என அறிவுறுத்திய நீதிபதி, பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் நபர்களுக்கு கருணை காட்ட முடியாது எனவும் உத்தரவில் தெரிவித்துள்ளார்.