“பாரதிராஜாவுக்கு பயமில்லையா?” - உயர்நீதிமன்றம் கேள்வி
நீதிமன்ற நிபந்தனைகளை நிறைவேற்றாவிட்டால் தான் கைது செய்யப்படுவோம் என்ற பயம் இயக்குநர் பாரதிராஜாவுக்கு இல்லையா? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
திரைப்பட விழா ஒன்றில் பேசிய இயக்குநர் பாரதிராஜா, சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் பாரதிராஜாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியது. 3 வாரங்களுக்கு சென்னை வடபழனி காவல்நிலையத்தில் கையெழுத்திடவும், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் பெற்றுக் கொள்ளவும் நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் குறிப்பிட்ட காலத்துக்குள் நீதிமன்றத்துக்கு செல்ல முடியவில்லை என்பதால் சரணடைவதற்கு கூடுதல் கால அவகாசம் வழங்கக்கோரி பாரதிராஜா தரப்பில் புதிய மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு விசரணைக்கு வந்த போது அபராதத்துடன் கால அவகாசம் வழங்கும்படி பாரதிராஜா தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அபராதம் செலுத்தினால் செய்த தவறு சரியாகி விடுமா என்று பாரதிராஜா தரப்பிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். இதனையடுத்து மனுவை திரும்பப்பெறுவதாக பாரதிராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை ஏற்ற நீதிபதி முழு விவரங்களுடன் புதிய மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.