போக்குவரத்து கழக தேர்வுகள் நடப்பது எப்படி ? - உயர்நீதிமன்றம் கேள்வி
போக்குவரத்து கழகங்களில் ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கான பணியிடங்கள் எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றன? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த கோவைசாமி என்பவர் தொடர்ந்த வழக்கில், ஓட்டுநர், நடத்துநர், இளநிலை உதவியாளர் ஆகியோரை நேர்முகத் தேர்வு மூலம் பணிக்கு நியமிப்பது வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருப்பதாக தெரிவித்திருந்தார். அத்துடன் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் போக்குவரத்துக் கழகங்களில் ஊழியர்கள் தேர்வு செய்யப்படுவதில் முறைகேடுகள் நடப்பதாகவும் மனுதாரர் குற்றம்சாட்டினார். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பணிக்காக காத்திருப்பதாக குறிப்பிட்டார்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, போக்குவரத்து கழகத்தில் குரூப் சி பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வின் மூலம் பணியிடங்களை நிரப்புவது சட்ட விரோதம் என்றும், எழுத்துத் தேர்வு மூலமே நியமிக்க வேண்டும் என்று 2012 ஆம் ஆண்டு உத்தரவிட்டார். இதை எதிர்த்து அரசுப் போக்குவரத்து மேலாளர் கடந்த 2014ஆம் ஆண்டு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, போக்குவரத்து கழகத்தில் ஊழியர்களை நியமிக்க எந்த அடிப்படையில் நேர்முகத் தேர்வு நடத்தப்படுகிறது என்று வினவினர். மேலும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறதா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதுதொடர்பாக போக்குவரத்து கழகம் அறிக்கை தாக்க செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஒத்தி வைத்தனர்.