தவறான சிகிச்சை வழங்கப்பட்டதாக ஆணையம் எப்படி கூற முடியும்?: அப்போலோ மருத்துவமனை
ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு தடைகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்போலோ தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து விசாரிக்க ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு தடை விதிக்கக்கோரி, அப்போலோ மருத்துவமனை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இதுகுறித்து அப்போலோ தரப்பிலும் ஆணையம் தரப்பிலும் கடந்த 3 நாட்களாக வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அப்போது அப்போலோ மருத்துவமனை தரப்பு வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை வரம்பை மீறி நடந்து கொள்வதாகவும், மருத்துவத்தில் நிபுணத்துவம் பெறாத ஆணையம், மருத்துவ நிபுணத்துவம் பற்றி விசாரணை நடத்துவது தவறு எனவும் வாதிட்டார்.தவறான சிகிச்சை வழங்கப்பட்டதாக ஆணைய வழக்கறிஞர் எப்படி கூற முடியும் என அப்போலோ மருத்துவமனை தரப்பு கேள்வி எழுப்பியது.
ஜெயலலிதாவுக்கான சிகிச்சையை ஆய்வு செய்ய ஆறுமுகசாமி ஆணையம் ரகசியமாக மருத்துவகுழு அமைத்துள்ளதாகவும் அரசியல் தலைவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை போதுமானதா என்பதை ஆய்வு செய்ய ஆணையம் அமைத்திருப்பது இதுவே முதல் முறை எனவும் தெரிவித்தனர். இந்நிலையில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவுற்ற நிலையில் தேதி குறிப்பிடாமல் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளனர்.