விஜய் தந்தை மீதான வழக்கு - அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு
நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணையை 3 மாதத்துக்குள் முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திரைப்பட இசை வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை லஞ்சம் எனக்கூறியதாக நாராயணன் என்பவர் காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், வழக்கை விசாரித்து இறுதி அறிக்கையை 3 மாதத்தில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய விருகம்பாக்கம் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே இந்த வழக்கில் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.