சைவ வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து... அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!
சைவ வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன் ஆஜரானார். அப்போது, பொன்முடிக்கு எதிராக பெறப்பட்ட 115 புகார்களில் 71 புகார்கள் முடித்து வைக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறினார்.
மேலும், 40 புகார்கள் முடித்து வைக்கப்பட்டது குறித்து புகார்தாரர்களுக்கு தபால் மூலம் தகவல் அனுப்பப்பட்டதாகவும், நான்கு புகார்கள் ஆன்லைன் மூலமாகவே முடித்து வைக்கப்பட்டதாக தெரிவித்தார்.
இதனையடுத்து, புகார்கள் முடித்து வைக்கப்பட்டது குறித்து உரியவர்களிடம் ஒப்புகை பெறப்பட்டதா? என நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த தலைமை வழக்கறிஞர், அனைவரிடமும் பெறப்பட்ட ஒப்புகை இருப்பதாக கூறினார்.
அதனை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை ஆகஸ்ட் 14ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.