'புத்தகப் பையில் கட்சித் தலைவர்கள் படம் கூடாது' - சென்னை உயர்நீதிமன்றம்
பள்ளி மாணவர்களின் புத்தகப்பைகள் உள்ளிட்டவற்றில் அரசியல் கட்சித் தலைவர்களின் படங்களை அச்சிட்டு, அரசு நிதியை தவறாகப் பயன்படுத்தக் கூடாதென சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் இருப்பில் உள்ள, முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் படங்கள் அச்சிடப்பட்ட நோட்டுகள், புத்தகப் பைகளை கைவிட வாய்மொழியாக உத்தரவிடப்பட்டுள்ளதாக பொதுநல வழக்கு ஒன்றில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படும் என்பதால், அவற்றை மாணாக்கருக்கு வினியோகிக்க உத்தரவிடுமாறும் கோரப்பட்டிருந்தது. எதிர்காலத்தில் இவற்றில் அரசியல் கட்சித் தலைவர்களின் படங்களை அச்சிட தடை விதிக்குமாறும் கோரப் பட்டிருந்தது.
மனு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசின் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், முன்னாள் முதல்வர்களின் படங்கள் அச்சிடப்பட்ட 64 லட்சம் புத்தகப் பைகள், 10 லட்சம் எழுதுபொருட்கள் வீணடிக்கப்படாது என்றும், மாணாக்கருக்கு விநியோகிக்கப்படும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்ததாக சுட்டிக்காட்டினார். பள்ளிக்கூட புத்தகப்பைகளில் படங்களை அச்சிடுவதை முதல்வர் விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு மற்றும் முதலமைச்சரின் முடிவு சிறப்பானது என பாராட்டிய நீதிபதிகள், பள்ளி புத்தகப்பைகள் உள்ளிட்டவற்றில் அரசியல் கட்சித்தலைவர்களின் படங்களை அச்சிட்டு, அரசு நிதியை தவறாக பயன்படுத்தக்கூடாதென அறிவுறுத்தினர். இந்த நடைமுறை இனிமேலும் தொடராமல் இருப்பதை உறுதி செய்திடவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். விளம்பரத்துக்காக அரசு நிதி பயன்படுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்யவும், பள்ளி புத்தகப் பைகளில் அரசியல் கட்சித் தலைவர்களின் படங்களை அச்சிடக் கூடாதென உத்தரவிட்டும், வழக்கை முடித்து வைத்தனர்.