மே 1,2-ல் முழு ஊரடங்குக்கு உயர் நீதிமன்றம் பரிந்துரை: திமுக, அதிமுக பார்வை என்ன?

மே 1,2-ல் முழு ஊரடங்குக்கு உயர் நீதிமன்றம் பரிந்துரை: திமுக, அதிமுக பார்வை என்ன?

மே 1,2-ல் முழு ஊரடங்குக்கு உயர் நீதிமன்றம் பரிந்துரை: திமுக, அதிமுக பார்வை என்ன?
Published on

வருகிற மே 1 மற்றும் 2ஆம் தேதி முழு ஊரடங்கை அமல்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருப்பதால், இது தொடர்பாக திமுக, அதிமுக-வின் பார்வை என்ன? - இதோ...

பொன்முடி (திமுக முன்னாள் அமைச்சர்): "வாக்கு எண்ணும் தேதி ஞாயிற்றுக்கிழமை வருவதால் அன்று முழு ஊரடங்கு அமலில் இருக்கும். முழு ஊரடங்கிற்கும் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதற்கும் எந்த இடையூறும் இருக்காது. தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் நிச்சயமாக அவரவர் பகுதிகளில் சிறிது நிதானத்தோடு கொண்டாட வேண்டிய அவசியம் ஏற்படும். மற்றபடி வழக்கம்போல் இருக்கும் என்றுதான் நான் நம்புகிறேன்.

பொதுவாக முழு ஊரடங்கால் பலருக்கும் பொருளாதார ரீதியாக பல்வேறு பிரச்னைகள் வருவது இயற்கை. ஆனால் இந்த கொரோனா நேரத்தில் பொருளாதாரத்தை கருத்தில் கொள்ளாமல் உயிர்தான் முக்கியம் என்ற உணர்வோடு செயல்பட வேண்டிய அவசியமும் இருக்கிறது. அந்த அடிப்படையில்தான் மு.க.ஸ்டாலின் மே 2-க்கு பிறகு ஊரடங்கு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று முன்னெச்சரிக்கையாக அறிவித்திருக்கிறார். மக்கள் முழுமையாக அரசு சொல்வதை கேட்டு விழிப்போடு இருந்து கொரோனாவை ஒழிக்க வேண்டும்."

புகழேந்தி (அதிமுக செய்தித் தொடர்பாளர்): ”பரிந்துரை செய்த உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஆலோசனையை வரவேற்கிறேன். இந்த கொரோனா பரவலுக்கு முக்கிய காரணம் தேர்தல் ஆணையம் என்பதில் எனக்கு எந்த ஐயப்பாடும் இல்லை. தேர்தல் ஆணையத்தால்தான் இப்படிப்பட்ட சூழ்நிலை உருவாகியிருக்கிறது. தேர்தலில் யார் வெற்றிபெறுவது என்ற போட்டா போட்டியில் இறங்கி களத்திலே மோதுகின்ற நிலை ஏற்பட்டு முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்தது போன்ற காரணத்தால் கொரோனா பரவல் அதிகமானது.

தேர்தலை நடத்துகின்ற தேர்தல் ஆணையம் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அவர்கள், அவர்களது கடமையை செய்ய வேண்டும், யார் செத்தாலும், யார் எந்த நோயிலே சிக்கித் தவித்தாலும், பரவாயில்லை என்ற ஒரு நிலைப்பாட்டை எடுத்தது தேர்தல் ஆணையம், அதனை கண்டனம் செய்து கொலைக்கு சமமானது என்று உயர் நீதிமன்றம் சொல்லியிருப்பதை நான் மனபூர்வமாக வரவேற்கிறேன்.

அதேபோல மே 1 மற்றும் 2ஆம் தேதி மீண்டும் கூட்டமாக கூடுவார்கள். அதனால் மேலும் கொரோனா பரவுவதற்கு காரணமாக இருக்கக்கூடாது என்ற நல்லெண்ண அடிப்படையிலே உயர் நீதிமன்றம் முழு ஊரடங்கை பரிந்துரை செய்திருக்கலாம்.”

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com