உயிருடன் உள்ளவர்களுக்கு பேனர் வைக்க தடையில்லை: உயர்நீதிமன்றம்
உயிருடன் உள்ளவர்களின் படங்களை பேனர்கள் மற்றும் கட் அவுட்டுகளில் பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடையை உயர்நீதிமன்றம் நீக்கியுள்ளது.
உயிரோடு இருப்பவர்களுக்கு கட்-அவுட், பேனர் போன்றவற்றை வைக்க கடந்த அக்டோபர் 23ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன் தடைவிதித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை மாநகராட்சி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்தவழக்கு 2 நீதிபதிகள் கொண்ட அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பேனர் தடை உத்தரவால், வர்த்தக ரீதியிலான விளம்பரங்கள் அதிக அளவு பாதிக்கப்படும், மாநகராட்சியின் வருமானமும் பாதிக்கும் என்று அரசு தலைமை வழக்கறிஞர் வாதிட்டார். இதனால் தலைமை நீதிபதி அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது.
பின்னர் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ஆர் ஹேமலதா முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, ஆபாச படங்கள் மற்றும் கருத்துகள் பேனர்களில் இருக்கக் கூடாது என்றுதான் விதிகள் உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர். அத்துடன் நீதிபதி வைத்தியநாதன் உத்தரவில் உயிருடன் இருப்பவர்களின் படங்கள் கூடாது என்ற தீர்ப்பின் பகுதி நீக்கப்படுவதாகவும் உத்தரவிட்டனர். இதனால் உயிருடன் இருப்பவர்களின் புகைப்படங்களுடன் பேனர் வைப்பதற்கு இருந்த தடை நீங்கியுள்ளது.

