எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கு ரூ.5 லட்சம் அபராதம் - உயர்நீதிமன்றம்
இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெறாமல் முதுநிலை மருத்துவ டிப்ளமோ படிப்புகளை நடத்த, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெறாமல் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் முதுநிலை மருத்துவ டிப்ளமோ படிப்புகள் நடத்துவதாகவும், அதற்கு தடை விதிக்கக் கோரியும் கடந்தாண்டு வழக்குத் தொடரப்பட்டது. விசாரணையின்போது, இதுபோன்ற படிப்புகளை வழங்குவது சட்டவிரோதமல்ல எனவும், மருத்துவர்கள் பற்றாக்குறைக்கு தீர்வுக்காணவே பல்கலைக்கழக நிர்வாக குழு இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவ பல்கலைக்கழகம் தெரிவித்தது.
ஆனால், மத்திய அரசு அல்லது மருத்துவ கவுன்சில் ஒப்புதல் இல்லாமல் எந்த படிப்பையும் வழங்க முடியாது என்றும், இதுகுறித்து ஏற்கெனவே நீதிமன்றம் பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாகவும் மருத்துவகவுன்சில் தரப்பில் வாதிடப்பட்டது. அதனை ஏற்ற நீதிபதி சுந்தர், இதுபோன்ற படிப்புகளை நடத்த அனுமதித்தால், அதில் படித்து முடித்தவர் அந்த பிரிவில் நிபுணர் என மக்கள் தவறாக புரிந்து கொள்ள வாய்ப்புள்ளதாக கூறி தடைவிதித்தார். ஏற்கெனவே நீதிமன்றம் இதுதொடர்பாக பிறப்பித்த உத்தரவை மதிக்காமல் செயல்பட்டதாக எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அந்த தொகையை 4 வாரத்திற்குள் செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.