
இஸ்லாமிய அமைப்புகளின் சட்டமன்ற முற்றுகை போராட்டத்திற்கு மார்ச் 11ஆம் தேதி வரை தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகியவற்றிற்கு ஆதரவளிக்க மாட்டோம் என தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி இஸ்லாமிய அமைப்பினர் சட்டப்பேரவை முற்றுகை போராட்டத்தை அறிவித்துள்ளனர். இந்தப் போராட்டத்திற்கு தடை விதிக்ககோரி, இந்திய மக்கள் மன்ற தலைவர் வாராகி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார்.
இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற முறையீட்டை கேட்ட தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி அமர்வு, மனுவாக தாக்கல் செய்தால் விசாரிப்பதாக தெரிவித்தது. இதையடுத்து வாராகி மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் சென்னை வண்ணாரப்பேட்டையில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர். இந்தப் போராட்டங்கள் சட்டவிரோதமாக நடப்பதாகவும், இதில் சிலர் உயிரிழந்தாக தவறான தகவலை பரப்பியதாக குற்றச்சாட்டு எழுந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
எனவே தமிழ்நாடு இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சியினர் கூட்டாக இணைந்து பிப்ரவரி 19ஆம் தேதி நடத்தவுள்ள சட்டப்பேரவை முற்றுகை போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த மனுவை இன்று அவசர வழக்காக நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது மனுதாரர் வாராகி மற்றும் சென்னை மாநகர காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால் இருவரும் முற்றுமை போராட்டத்திற்கு எதிராக வாதாடினர். மேலும் போராட்டம் தொடர்பாக வண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தில் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், சட்டமன்ற முற்றுகையை அனுமதிக்க முடியாது எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சென்னையை பொறுத்தவரை ஏற்கனவே ஒதுக்கப்பட்ட இடங்களில் அமைதியான போராட்டம் நடத்த அனுமதி அளிக்கப்படும் என அரசு வழக்கறிஞர் கூறினார்.
வாதங்களை கேட்ட நீதிபதிகள் எம்.சத்யநாராயணன் மற்றும் ஆர்.ஹேமலதா, கடந்த கால சம்பவங்களிலிருந்து காவல்துறை இன்னும் பாடம் கற்க வேண்டியிருப்பதாக தெரிவித்தனர். அத்துடன் இதுதொடர்பாக மத்திய-மாநில அரசுகள், தமிழக டிஜிபி, சென்னை காவல் ஆணையர், வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையர் மற்றும் ஆய்வாளர் ஆகியோர் 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை மார்ச் 12க்கு ஒத்திவைத்தனர். மேலும் மார்ச் 11 வரை சட்டமன்ற முற்றுகை போராட்டத்திற்கு இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்டனர்.
சென்னை உயர்நீதிமன்றம் நாளைய போராட்டத்திற்கு தற்காலிக தடை விதித்துள்ள நிலையில், மவுண்ட் ரோடு மக்கா மஸ்ஜித்தில் இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என இஸ்லாமிய அமைப்புகள் தெரிவித்துள்ளனர். எதிர்மனுதாரராக சேர்க்கவில்லை என்பதால் நீதிமன்றத்தின் தடை தங்களுக்கு பொருந்தாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.