மது கேடு என ஸ்டிக்கர் ஒட்டினால் மட்டும் போதாது : அரசுக்கு நீதிமன்றம் அறிவுரை
மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு என்று ஸ்டிக்கர் ஒட்டினால் மட்டும் போதாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.
காஞ்சிபுரம் படூரில் உள்ள தனியார் கல்லூரி அருகிலேயே மதுபானக் கடை அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அந்த கல்லூரி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கின் விசாரணை நீதிபதி கே.ரவிச்சந்திர பாபு முன்னிலையில் வந்தது. கல்லூரி வளாகத்துக்கு 65 மீ. தொலைவிலேயே டாஸ்மாக் மதுபானக் கடை அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மாணவர்கள் நலன்கருதி அந்த மதுபானக் கடையை உடனடியாக மூட உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது. விதிமுறைக்கு உட்பட்டே அந்த டாஸ்மாக் மதுபானக் கடை அமைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மதுக்கொள்கையை மாற்ற இதுவே சரியான தருணம். எனவே மதுக்கொள்கையை மாற்றுங்கள் என்று தமிழக அரசுக்கு அறிவுரை வழங்கினார். விதிக்குட்பட்டு டாஸ்மாக் அமைத்தாலும் மக்கள் நலனை கருத்தில் கொள்ளுங்கள் என்று கூறிய நீதிபதி, மக்கள் நலனை கெடுக்கும் டாஸ்மாக் மூலம் வருமானம் ஈட்டுவதை ஏற்க முடியுமா? என்றும் கேள்வி எழுப்பினார். மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு என ஸ்டிக்கர் ஒட்டினால் மட்டும் போதாது என்று குறிப்பிட்ட நீதிபதி, மக்கள் நலனுக்காகத்தான் மதுக்கடை அமைக்கிறோம் என அரசு கூற முடியாது என்றும் கூறினார். மேலும், இதுதொடர்பாக காஞ்சிபுரம் ஆட்சியருக்கு புதிதாக மனு அளிக்கும்படியும், அந்த புகார் மனு மீது ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி வழக்கினை முடித்து வைப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.