மூன்று பெண்களை கழுத்தறுத்து கொன்ற வழக்கு: தூக்கு தண்டனை ஆயுளாக குறைப்பு
நாமக்கல் மாவட்டம் மோகனூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்களை கழுத்தறுத்து கொன்ற வழக்கில் 2 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்துள்ளது.
தோப்பூரைச் சேர்ந்த மருத்துவர் சிந்து, அவரது தாய் மற்றும் பாட்டியை 3 பேர் கொண்ட கும்பல் கொலை செய்துவிட்டு 28 சவரன் நகையை திருடிச்சென்றது. 2011 ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்த கொலையில் கைது செய்யப்பட்ட காமராஜ், இளங்கோ ஆகியோருக்கு நாமக்கல் கூடுதல் அமர்வு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. அதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட இருவரது தூக்கு தண்டனையையும் ரத்து செய்த நீதிமன்றம், 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கு தண்டனை குறைப்பு செய்யக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், குற்றவாளிகளின் குழந்தைகளுக்கு நாமக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு கல்வி வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளியில் சேர்க்கும்போது, குழந்தையின் தந்தை என்ன வேலை செய்கிறார் என்பதை கேட்கக் கூடாது என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.