அனிதா மரணம் குறித்த புகாரை விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
அரியலூர் மாணவி அனிதா மரணம் குறித்து அளிக்கப்பட்ட புகாரை விசாரிக்கும்படி மாவட்ட காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நமது திராவிட இயக்கம் அமைப்பின் நிறுவனத்தலைவர் ஓவியம் ரஞ்சன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், நீட் தேர்வில் தகுதி பெறாததால், வேறு படிப்பில் சேரவிருந்த நிலையில் அனிதா திடீரென தற்கொலை செய்து கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் அனிதாவின் மரணம் குறித்து விசாரிக்க கோரி செந்துறை காவல் நிலைய ஆய்வாளரிடம் செப்டம்பர் 9 ஆம் தேதி புகார் அளித்ததாகவும், ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மனுதாரரின் புகார் மீது முதற்கட்ட விசாரணை நடத்தி, அதில் முகாந்திரம் இருந்தால் உடனடியாக வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முகாந்திரம் இல்லை என்றால் அதற்கான காரணத்தை ஒரு வாரத்திற்குள் தாக்கல் செய்யவும் அரியலூர் மாவட்ட காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

