ரேஷன் அரிசி கடத்தல் வழக்கு: முன்ஜாமீன் கேட்டவரை கொரோனா நிவாரண நிதி அளிக்க சொன்ன நீதிபதி

ரேஷன் அரிசி கடத்தல் வழக்கு: முன்ஜாமீன் கேட்டவரை கொரோனா நிவாரண நிதி அளிக்க சொன்ன நீதிபதி
ரேஷன் அரிசி கடத்தல் வழக்கு: முன்ஜாமீன் கேட்டவரை கொரோனா நிவாரண நிதி அளிக்க சொன்ன நீதிபதி

ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் முன்ஜாமீன் கோரியவரை, கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு கொரோனா நிவாரண நிதி அளிக்க சொல்லி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கோவையில் 1,820 கிலோ ரேஷன் அரிசி கடத்திய வழக்கில் ஒருவர் மீது கோவை சிஎஸ்சிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். போலீஸார் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன்கோரி, அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபானி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி, சில நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கினார். தனது அந்த நிபந்தனைகளில் கடத்தலில் ஈடுபட்டதாக சொல்லப்படும் நபர் கொரோனா நிவாரண நிதியாக கோவை சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு ரூ.10 ஆயிரம் அளிக்க வேண்டும்; அடுத்த இரண்டு வாரங்களுக்கு, அவர் தினமும் காலை 10.30 மணிக்கு வழக்குப்பதிவு செய்த சம்பந்தப்பட்ட போலீஸாரிடம் நேரில் ஆஜராக வேண்டும்; விசராணைக்கு அழைக்கும்போது நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, நிபந்தனையாக விதிக்கப்பட்ட தொகையை மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், இ.எஸ்.ஐ மருத்துவமனையின் டீன் ரவீந்திரனிடம் அளித்தார். இதேபோல, இதற்கு முன்பு மூன்று வெவ்வேறு வழக்குகளில் ஜாமீன் கோரியவர்களுக்கு ஜாமீன் வழங்க நிபந்தனையாக இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நிதி வழங்குமாறு நீதிபதி தண்டபானி உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவரை இந்த மருத்துவமனைக்கு ரூ.45 ஆயிரம் வரை இப்படியான நிதி கிடைத்துள்ளது.

- ஐஸ்வர்யா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com