சர்ச்சைக்குள்ளான கருணை இல்லம் மீது நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடை
காஞ்சிபுரம் மாவட்டம் பாலேஷ்வரம் புனித ஜோசப் கருணை இல்லம் மீது நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாலேஸ்வரத்தில் உள்ள புனித ஜோசப் கருணை இல்லத்தில் முதியோர்கள் மர்மமான முறையில் இறப்பதாகவும், அவர்களது எலும்புகள் விற்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கருணை இல்லத்தில் விசாரணை நடத்திய அதிகாரிகள் அங்கிருந்த 300-க்கும் அதிகமான முதியவர்களை அரசுக் காப்பகங்களுக்கு மாற்றி நடவடிக்கை மேற்கொண்டனர். இதனையடுத்து முறையான அனுமதியின்றி கருணை இல்லம் செயல்படுவதால் காப்பகத்தை ஏன் மூட உத்தரவிடக்கூடாது என மாவட்ட வருவாய் கோட்டாசியர் நோட்டீஸ் அனுப்பினார்.
கருணை இல்லம் முறையான அனுமதியுடன் செயல்பட்டு வருவதாகவும், இறப்புகள் முறையாக பதிவு செய்யப்படுவதாகவும் புனித ஜோசப் இல்லம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் வருவாய் கோட்டாசியர் அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்யக்கோரி கருணை இல்ல நிர்வாக இயக்குனர் தாமஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில் முறையான அனுமதி பெற்று கருணை இல்லம் நடத்தி வருவதாகவும், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க அரசுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரமேஷ், இத்தனை ஆண்டுகள் முறையாக அனுமதி பெற்று செயல்பட்டு வரும் கருணை இல்லத்தை ஏன் மூட வேண்டும் என கேள்வி எழுப்பினார். இது குறித்து விளக்கம் அளிக்க அரசு அவகாசம் கேட்டதால், இரண்டு வார கால அவகாசம் வழங்கி வழக்கை மார்ச் 21ஆம் தேதி ஒத்திவைத்தார். அதுவரை பாலேஸ்வரம் இல்லம் மீதான அரசின் நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை விதித்தும் உத்தரவிட்டார்.