9 - 12 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளை தொடங்கலாம் - கள்ளக்குறிச்சி பள்ளிக்கு அனுமதி

9 - 12 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளை தொடங்கலாம் - கள்ளக்குறிச்சி பள்ளிக்கு அனுமதி
9 - 12 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளை தொடங்கலாம் - கள்ளக்குறிச்சி பள்ளிக்கு அனுமதி

மாணவி மரணத்தை அடுத்து நடைபெற்ற கலவரத்தால் மூடப்பட்ட கள்ளக்குறிச்சி பள்ளியில் 9 முதல் 12ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளை தொடங்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் நிகழ்ந்த மாணவியின் மரணத்தை அடுத்து, கடந்த ஜூலை 17ஆம் தேதி பள்ளி வளாகத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் பள்ளியின் உடைமைகளை சூறையாடியதுடன், தீ வைத்தும் எரித்தனர். இந்த கலவரத்தை தொடர்ந்து பள்ளி மூடப்பட்டது. இந்நிலையில் பள்ளி வளாகம் முழுவதும் சீரமைக்கப்பட்டு விட்டதாகவும், அரசு அமைத்த ஆய்வுக்குழு ஆய்வு செய்துள்ளதாகவும் பள்ளியை நிர்வகிக்கும் லதா கல்வி அறக்கட்டளை தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் சிலம்பண்ணன், ஆட்சியர் அளித்த பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு சீரமைப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வகுப்புகளை நடத்த தயார் நிலையில் பள்ளி உள்ளதாகவும், பெரும்பாலான மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பதில்லை எனவும் தெரிவித்தார்.

பின்னர் நீதிபதி, 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஒரு மாத காலத்திற்கு நேரடியாக வகுப்புகளை தொடங்கலாம் என பள்ளிக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார். அதன் பின்னர் நிலைமையை பொறுத்து மற்ற வகுப்புகளையும் தொடங்குவது குறித்து முடிவுசெய்யலாம் எனவும் உத்தரவில் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு பள்ளிக்கு பாதுகாப்பு அளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, கூடுதல் பாதுகாப்பு தேவைப்பட்டால் காவல்துறையிடம் மனு அளிக்கலாம் என பள்ளிக்கு உத்தரவிட்டதுடன், அதற்கான கட்டணத்தை பள்ளி நிர்வாகம் செலுத்த வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து பாதுகாப்புக்கு தேவைப்படும் காவலர்கள் எண்ணிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர், எஸ்.பி மற்றும் பள்ளி நிர்வாகம் கலந்தாலோசித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை திங்கட்கிழமைக்கு (நவம்பர் 21) ஒத்திவைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com