சென்னை | நிதி நிறுவன மோசடி - தேவநாதனுக்கு சொந்தமான 12 இடங்களில் போலீசார் சோதனை! அலுவலகத்திற்கு சீல்!
செய்தியாளர்: ஜெ.அன்பரசன்
சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் கடந்த 1872ம் ஆண்டு ‘தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிட்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் தொடங்கப்பட்டது. 150 ஆண்டுகள் பழமையான இந்த நிதி நிறுவனத்தின் தலைவராக தேவநாதன் இருந்து வருகிறார். மயிலாப்பூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்த நிதி நிறுவனத்திற்கு சென்னையில் மட்டும் 5 கிளைகள் உள்ளன. தற்போது 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்பு தொகை உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யும் பணத்திற்கு 10 முதல் 11 சதவீதம் வரை வட்டி உறுதி என கவர்ச்சியான விளம்பரம் செய்ததை நம்பி தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரம் பேர் நிரந்தர வைப்பு தொகையாக சுமார் ரூ.525 கோடிக்கு மேல் முதலீடு செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த நிதி நிறுவனத்தில் குறைந்தபட்ச நிரந்தர வைப்பு நிதி ரூ.1 லட்சம் எனவும், அதிகபட்சமாக எவ்வளவு பணம் வேண்டும் என்றாலும் நிரந்தர வைப்பு நிதியாக செலுத்தலாம், செலுத்தும் பணத்திற்கு 10 முதல் 11 சதவீத வட்டி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதால் அதை நம்பி தமிழ்நாடு முழுவதும் ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலும், ரூ.50 லட்சம் முதல் ரூ.2 கோடி வரையிலும் ஏராளமானவர்கள் முதலீடு செய்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு முதல் பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு முதிர்வு தொகை மற்றும் வட்டி பணம் முறையாக வழங்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தினமும் மயிலாப்பூர் பகுதியில் உள்ள நிதி நிறுவனத்திற்கு சென்று பணத்தை கேட்டு வந்ததுள்ளனர். ஆனால், நிதி நிறுவனம் சார்பில் இதுவரை முறையாக பதில் அளிக்காததால் கடந்த ஜூன் மாதம் 6 ஆம் தேதி முதலீட்டாளர்கள் பலர் நிதி நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மைலாப்பூர் போலீசாரின் அறிவுரைப்படி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் சுமார் 140க்கும் அதிகமான புகார்கள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் 140 புகார்தாரர்களிடமிருந்து ரூ.50 கோடிக்கும் அதிகமாக மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து கடந்த 13ம் தேதி திருச்சியில் வைத்து நிதி நிறுவன தலைவரும், தனியார் டிவி உரிமையாளரும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவருமான தேவநாதன் மற்றும் நிதி நிறுவனத்தில் இயக்குநர்களான குணசீலன், மகிமை நாதன் ஆகிய 3 நபர்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், தேவநாதன் தொடர்புடைய 12 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்றிரவு சோதனை செய்துள்ளனர். மயிலாப்பூரில் உள்ள நிதி நிறுவனம், தி நகரில் உள்ள தேவநாதனின் வீடு, குற்றத்திற்கு உடந்தையாக இருந்த நபர்களின் வீடுகள் என 12 இடங்களில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
சோதனையில் ரூ. 4 லட்சம் ரொக்கம், இரண்டு கார்கள், ஹார்ட் டிஸ்க்கள் மற்றும் சில முக்கிய ஆவணங்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். சோதனையின் முடிவில் நிதி நிறுவனம் மற்றும் தனியார் தொலைக்காட்சி அலுவலகம், தேவநாதனின் அலுவலகம் ஆகியவற்றுக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சீல் வைத்தனர். இந்த மோசடி குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

.png?rect=0%2C0%2C800%2C450&w=480&auto=format%2Ccompress&fit=max)