மீரா மிதுன் மீது சென்னை எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு
தொழிலதிபர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பிக் பாஸ் பங்கேற்பாளரான நடிகை மீரா மிதுன் மீது சென்னை எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஜோ மைக்கேல் பிரவீன் என்பவர் நடிகை மீரா மிதுன் மீது சென்னை எழும்பூர் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில், எனக்கும், மீரா மிதுனுக்கும் இடையே பணப்பிரச்னை உள்ளது. இந்நிலையில் தன் மீதும், தனது குடும்பத்தினர் மீதும் தாக்குதல் நடத்த மீரா மிதுன் திட்டமிட்டுள்ளார். இதனால் மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். 2017ம் ஆண்டு பேஸ்புக் மூலம் நண்பர்களான மீரா மிதுனுக்கும், பிரவினுக்கும் இடையே பணப்பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
புகாரை ஏற்றுக்கொண்ட எழும்பூர் போலீசார், மீரா மிதுன் மீது ஆபாசமாக பேசுதல், மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படத்தில் நடித்தவர் மீரா மிதுன். இவர் 2019-ம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்றவர். தனியார் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பலராலும் மீரா மிதுன் அறியப்பட்டார்.