'மாமனார் மீது ஆணை' 'ஒம் நமசிவாய' 'ஜெய் பீம்'-களைகட்டிய சென்னை மாமன்ற உறுப்பினர் பதவியேற்பு

'மாமனார் மீது ஆணை' 'ஒம் நமசிவாய' 'ஜெய் பீம்'-களைகட்டிய சென்னை மாமன்ற உறுப்பினர் பதவியேற்பு
'மாமனார் மீது ஆணை' 'ஒம் நமசிவாய' 'ஜெய் பீம்'-களைகட்டிய சென்னை மாமன்ற உறுப்பினர் பதவியேற்பு

சென்னை மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி வார்டு உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

பதவியேற்பு நிகழ்ச்சியில் பல சுவாரசியமான நிகழ்வுகளும், அதேபோல கட்சிக்கு ஏற்றவாறு உறுதிமொழியும் எடுக்கப்பட்டது. குடும்ப உறுப்பினர்கள் முதல் குலதெய்வம் வரை நன்றி தெரிவித்து வார்டு உறுப்பினர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர்.

'நான் தினமும் வணங்கும் தில்லை அம்பளத்தான் மற்றும் அரங்கனுக்கும் கோடி நமஸ்காரம்' என்றும் 'தெய்வ அணுகிரகத்தால் வெற்றி பெற்றேன்' என்றும் 134வது வார்டு பாஜக மாமன்ற உறுப்பினர் உமா ஆனந்தன் பதவி எற்றார்.

சென்னை மாநகராட்சி 123 வது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாமன்ற உறுப்பினர் சரஸ்வதி மோகன் சோசலிசம் ஓங்குக என பதவி எற்றார்.

மாமனார் மீது ஆணை என 111 வார்டு திமுக உறுப்பினர் நந்தினி பதவி ஏற்றுக்கொண்டார். புரட்சியாளர் அம்பேத்கர் வாழ்க, பெரியார் வாழ்க, முதல்வர் ஸ்டாலின் வாழ்க, எழுச்சித்தமிழர் திருமா வாழ்க, ஜெய் பீம் என 107 - கிரண் ஷர்மிலி (விசிக) பதவியேற்றார்.

ஒம் நமசிவாய என பதவி ஏற்பை முடிக்கும் போது குறிப்பிட்டார் திமுக 104வது வார்டு உறுப்பினர் செம்மொழி.

சிந்தனை சிற்பி சிங்கார வேலர் நாமம் வாழ்க என 21 வயது இளம் 98 வது வார்டு மாமன்ற சிபிஎம் உறுப்பினர் பிரிய தர்ஷினி பதவி ஏற்றார்.

கை கைவிட்டது; ஆனால் மக்கள் கைவிடாமல் என்னை தேர்ந்தெடுத்தார்கள். வாக்கு அளித்த மக்கள், சகோதர சகோதரிகளுக்கு நன்றி தெரிவித்து பதவி ஏற்றார் 92வது வார்டு சுயேட்சை உறுப்பினர் திலகர்.

அம்பேத்கர், காரல் மார்க்ஸ், இரட்டைமலை சீனிவாசன், அயோத்திதாசர், முன்னாள் மேயர் சிவராசு உள்ளிட்டோர் பெயரை நினைவுகூர்ந்து உறுதியேற்பதாக விடுதலை சிறுத்தைகள் உறுப்பினர் அம்பேத்வளவன் எனும் குமாரசாமி உறுதியேற்றார்.

கண் கலங்கி பதவி ஏற்றார் வார்டு 59 வது உறுப்பினர் சரஸ்வதி.

வெல்க பொதுவுடைமை கொள்கை; வெல்க திராவிட மாடல். வாழ்க ஸ்டாலின் ஐயா! வாழ்க விடுதலை போராட்ட வீரர் நல்லகண்ணு என பதவி ஏற்று கொண்டார் சிபிஐ வார்டு 42 உறுப்பினர் ரேணுகா. தளபதி ஐயாவாழ்க! ஸ்டாலின் ஐயா வாழ்க! எனக்கூறி வார்டு 2 கோமதி சுயச்சை உறுப்பினர் பதவி ஏற்றுக்கொண்டார்.

அகில இந்திய சமூக நீதிக் கூட்டமைப்பை தொடங்கியுள்ள முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து 128 வது மாமன்ற உறுப்பினர் ஸ்டெல்லா ஜாஸ்மின் ரத்னா ( திமுக) பதவி ஏற்றார். 9 மாத கர்ப்பிணியான 167 வது வார்டு துர்கா தேவி நடராஜன் பதவி ஏற்றுக்கொண்டார்.

'’பதவி வரும் போது பணிவு வர வேண்டும்’’ என்ற எம்ஜிஆர் பாடல் பாடி பதவியேற்றார் 193 வது வார்டு அதிமுக உறுப்பினர் கோவிந்தசாமி. அப்போது கச்சேரி நிகழ்ச்சியா இது என திமுக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியதால் சலசலப்பு ஏற்பட்டது. அதற்கு நீங்கள் பேசியதை நான் பாடினேன் அவ்வளவுதான் என அதிமுக உறுப்பினர் கோவிந்தசாமி பதிலளித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com