மாநகராட்சி ஊழியர் கொலை: கஞ்சா வியாபாரியின் 2 மனைவிகள் கைது
சென்னையில் மாநகராட்சி ஊழியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கஞ்சா வியாபாரியின் 2 மனைவிகள் மற்றும் மகன்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் சென்னை மாநகராட்சியில் மெக்கானிக்காக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் காசிமேடு பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை சம்பவம் நடைப்பெற்று இருக்கலாம் என சந்தேகித்த காவல்துறை அந்தக் கோணத்தில் விசாரித்து வந்தனர். சிவக்குமாருக்கு அதே பகுதியை சேர்ந்த கஞ்சா வியாபாரியான தடி செந்திலுக்கும் முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. தடி செந்தில் தற்போது புழல் சிறையில் உள்ளார். இச்சம்பவம் தொடர்பாக திவாகரன், ராகவன், வேணு, தேசப்பன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் தடி செந்தில் ஏற்பாட்டில் கூலிப்படையை ஏவி சிவக்குமார் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
காசிமேடு பகுதியில் குடிசைமாற்று வாரிய குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. சிவக்குமார் மாநகராட்சி ஊழியராக இருப்பதால் தனக்கு வேண்டியவர்களுக்கு வீடுகள் ஒதுக்க உதவியதாக தெரிகிறது. இதேபோல் கஞ்சா வியாபாரியான செந்திலும் தனக்கு வேண்டியவர்களுக்காக வீடுகள் கிடைக்க முயற்சி எடுத்துள்ளார்.இதற்கு சிவக்குமார் முட்டுக்கட்டையாக இருந்துள்ளார். மேலும் கஞ்சா வியாபாரம் குறித்து சிவக்குமார் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து வந்துள்ளார். இதன்காரணமாக இவர்களுக்கிடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
சிவக்குமாரை தீர்த்துக்கட்ட செந்தில் சிறையில் திட்டம் தீட்டியுள்ளார். சிறையில் இருக்கும் தன்னை சந்திக்க வந்த மனைவிகள் மற்றும் மகன்கள் மூலம் தனது திட்டத்தை நிறைவேற்றியுள்ளார். இதனையடுத்து செந்திலின் மனைவிகள் வனிதா, வாசுகி மற்றும் மகன்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அளித்த தகவலின் பேரில் கூலிப்படையை சேர்ந்த நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.