ஆர்.கே. நகரில் விதிகளை மீறும் வாகனங்கள் பறிமுதல்: மாநகராட்சி ஆணையர்
ஆர்.கே. நகரில் விதிகளை மீறி பரப்புரையில் ஈடுபடும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே. நகரில் தேர்தல் விதிமீறல்களை தடுக்க தொகுதி முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள தேர்தல் அலுவலர்கள், பறக்கும் படையினர், இதுவரை வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 55 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். அத்துடன் மண்டபங்கள், சொகுசு விடுதிகளில் தங்கியிருக்கும் வெளியூர்வாசிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் விதிகலை மீறி பரப்புரையில் ஈடுபடும் வாகனங்கள் உடனடியாக பறிமுதல் செய்யப்படும் என மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பாதுகாப்பில் ஈடுபடுவதற்காக இன்று 2 கம்பெனி மத்தியப் படையினர் வந்துள்ளனர். குஜராத்தில் சட்டப்பேரவைக்கான முதல்கட்டத் தேர்தல் பாதுகாப்பில் ஈடுபட்ட அவர்கள் ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் வந்தடைந்தனர். 2 கம்பெனிப் படைகளில் 160 வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். இன்று வரை ஆர்.கே நகர் பாதுகாப்பிற்காக 5 கம்பெனி மத்தியப் படையினர் வந்துள்ளனர். மேலும் 7 குழுவினர் ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரவுள்ளனர். ஆர்.கே.நகர் வந்துள்ள துணை ராணுவப்படையினர், தமிழக காவல்துறையினருடன் சேர்ந்து தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.