தமிழர்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக நாகரீகத்துடனும், முறையான வர்த்தகத்துடன் வாழ்ந்து வந்துள்ளனர். இதற்கு பல்வேறு சாட்சியங்கள் அவ்வப்போது கண்டறியப்பட்டுள்ளன. அந்த வகையில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோழர் ஆட்சிக்கால நாணயம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழ் எழுத்தில் சோழ மன்னரின் பெயர் பொறிக்கப்பட்ட நாணயம் இது மட்டும்தான் எனக் கூறப்படுகிறது. இந்த நாணயம் சென்னையில் நடைபெறும் நாணயக் கண்காட்சி குழுவினரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது ஆயிரம் ஆண்டுகள் பழமையான நாணயம் எனப்படுகிறது.
360 மில்லி கிராம் எடையுள்ள தங்கத்திலான இந்நாணயம், தஞ்சை மாவட்டத்திலுள்ள நாணய சேகரிப்பாளருக்கு கிடைத்துள்ளது. இந்த நாணயம் சோழ மன்னர் ராஜராஜேஸ்வரத்தின் ஆட்சிக்கலாத்தில் பொறிக்கப்பட்டதாக கருதப்படுகிறது. அந்த நாணயத்தை காணும் போதே அதை உணரவும் முடிகிறது. நாணயத்தின் முன்பக்கத்தின் நடுப்பகுதியில், சங்ககால நாணயங்களில் உள்ளது போல வலது காலினை தூக்கி, இடப்பக்கம் நோக்கி அமர்ந்திருக்கும் கம்பீர புலி ஒன்று உள்ளது. புலியின் இருபுறங்களிலும் அலங்கார விளக்கு, மேற்பரப்பில் ராஜ வெண்கொற்றக்குடை உள்ளது. இருவெண்சாமரங்களும் அழிந்த நிலையில் வெளிப்படுகின்றன.
நாணயத்தின் பின்புறத்தில் புள்ளிகளால் ஆன வட்ட வடிவ மாதிரியின் நடுப்பகுதியில் கடிகார திசையில் “ராஜ உடை” என்ற 10ஆம் நூற்றாண்டு கிராந்த எழுத்து பொறிக்கப்பட்டுள்ளது. அந்த எழுத்துகள் சோழ மன்னன் ராஜ உடையார் ஸ்ரீராஜராஜத்தேவரின் பெயரை குறிக்கிறது. பொறிக்கப்பட்டிருக்கும் எழுத்துக்கள் இரண்டு வரிகளில் உள்ளன. முதல் வரியில் “ராஜ” என்ற எழுத்தும் இரண்டாம் வரியில் ‘உ’ என்ற தெளிந்த எழுத்தும் இடம்பெற்றுள்ளன. அதனுடன் ‘டை’ எழுத்து கூட்டெழுத்தாகவும் உள்ளது. இந்த நாணயம் சோழர் வரலாற்றை உரிய பல ஆதாரங்களுடன் எழுதுவதற்கு உற்றத்துணையாக கிராந்த தமிழ்மொழி பதித்த ஒன்றாக இருக்கிறது.
இதுமட்டுமின்றி தமிழர்கள் மட்டும் இந்தியர்கள் பயன்படுத்தி வந்த பலநூறு நாணயங்களை காட்சிப்படுத்தும் வகையில் சென்னையில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு நாணயக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. சென்னை நாணயவியல் கழகம் நடத்தும் தேசிய அளவிலான இந்தக் கண்காட்சி ஆற்காடு சாலையில் சாலிகிராமம் பகுதியில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதில் மன்னர் கால நாணயங்கள், ஆங்கிலேயர் கால நாணயங்கள், மெட்ராஸ் மாகாணத்தின் ஆரம்பக்கால நாணயங்கள் மற்றும் வெளிநாட்டின் பணம் மற்றும் நாணயங்கள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் பல கலைப்பொருட்கள் பார்வை மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.