குளுகுளுவென மாறிய சென்னை நகரம் - பொதுமக்கள் மகிழ்ச்சி
கடந்த சில மாதங்களாக சென்னையில் கடும் வெயில் வாட்டி வந்த நிலையில், இன்று குளிர்ச்சியான வானிலை உருவாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கேரளாவின் தென்மேற்கு பருவமழை காரணமாக சில மாவட்டங்களில் மழை பெய்தாலும், பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து 100 டிகிரியை தாண்டியது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். அத்துடன் மழை இல்லாத காரணத்தால், தண்ணீருக்காக மக்கள் பெரும் இன்னலை சந்தித்துள்ளனர். பல இடங்களில் குடிநீருக்காக போராட்டமும், மழைக்காக பூஜைகளுக்கு நடத்தப்பட்டு வருகின்றன.
தலைநகர் சென்னையை பொறுத்தவரையில் மழை தொடர்ந்து பொய்த்து வரும் காரணத்தால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதுமட்டுமின்றி கடும் வெயிலுடன் சேர்த்து அனல் காற்றும் வீசியதால், மதிய நேரங்களில் வெளியே வரமுடியாத நிலை இருந்தது. எப்போது வானிலை மாறும்? வெயிலின் தாக்கம் எப்போது குறையும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் இருந்து வந்தனர் .
இந்நிலையில் திடீரென இன்று மதியம் ஒரு மணிக்கு மேல் சென்னையில் வெயில் முற்றிலும் குறைந்தது, 2 மணிக்கு மேல் வானிலை குளுகுளுவென மாறியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் மழை வரும் என நம்பிக்கையில் உள்ளனர்.