“சீன அதிபர் வருகையால் சுத்தமானது சென்னை” - உயர்நீதிமன்றம் கருத்து
சீன அதிபர் வருகை போல மற்ற உலக தலைவர்கள் வந்தால் தமிழகமே சுத்தமாகிவிடும் என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்த விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீயின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு மனுத் தாக்கல் செய்திருந்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் சரவணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி வைத்தியநாதன், “சீன அதிபர் வருகையால் தான் சென்னை சுத்தமாகி உள்ளது. இதேபோல மற்ற உலக தலைவர்கள் வந்தால் தமிழகமே சுத்தமாகிவிடும் என்று தெரிவித்தார்.
அத்துடன் “சுபஸ்ரீ மரணம் விவகாரத்தில் காற்றின் மீது தான் வழக்கு போடவேண்டும் என பேசுவதா? கோட்டையில் இருந்த ராஜா ஒருவரின் குடிசைக்கு வந்தபோது ஊரே சுத்தமானது” என்ற குட்டி கதையை கூறியும் அவர் கருத்து தெரிவித்தார். பின்னர், 5 லட்சம் இடைக்கால இழப்பீடு உத்தரவின் நகல் வந்த பிறகு வழக்கை விசாரிப்பதாக கூறி வழக்கு சற்றுநேரம் ஒத்திவைத்தார்.
இதையடுத்து பதிலளித்த தமிழக அரசு தரப்பு, “சுபஸ்ரீ மரணம் தொடார்பான வழக்கு விசாரணையை சென்னை காவல்ஆணையர் கண்காணிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயகோபால் உள்ளிட்ட இரண்டு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் விசாரணை முழுமையாக முடிந்துவிட்டது. விரைவில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும். அரசு சார்பில் சுபஸ்ரீ குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இடைக்கால இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. சுபஸ்ரீ உயிரிழப்புக்குப் பின்னர் பேனர் வைக்க தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் அனுமதி வழங்கவில்லை” என்று தெரிவித்தது.