சென்னையில் கடலோர விரைவு போக்குவரத்திற்காக ஆய்வு.. எதிர்ப்பு கிளம்புவது ஏன்..?

சென்னையில் கடலோர விரைவு போக்குவரத்திற்காக ஆய்வு.. எதிர்ப்பு கிளம்புவது ஏன்..?
சென்னையில் கடலோர விரைவு போக்குவரத்திற்காக ஆய்வு.. எதிர்ப்பு கிளம்புவது ஏன்..?

மெரினா கடற்கரை சாலையை - பெசன்ட் நகர் கடற்கரை சாலையுடன் இணைக்கின்ற கடலோர விரைவு போக்குவரத்தை உருவாக்குவதற்கான சாத்திய கூறுகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உயர்நீதிமன்றம் சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த திட்டத்திற்கு சுற்றுசூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

அடையார் ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரம் பகுதியில் அமைந்திருக்கிறது புரோக்கன் பிரிட்ஜ். எலியட்ஸ் கடற்கரை அருகே அமைந்துள்ள இந்த பாலம் ஒரு காலத்தில் அடையார் பகுதியையும் பட்டினம்பாக்கம் ஸ்ரீனிவாசபுரம் கடற்பகுதியை இணைக்கும் பாலமாக இருந்தது. ஆனால் 1977-ல் ஏற்பட்ட வெள்ளத்தில் இந்த பாலம் கடுமையாக சேதம் அடைந்தது. இதனையடுத்து நினைவு சின்னமாக மாறிய இந்த பாலம் இளைஞர்கள் செல்ஃபி எடுக்கவும், திரைப்பட காட்சிகள் எடுக்கவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே சென்னை விமான நிலையம் மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து மெரினா கடற்கரை சாலை நோக்கி செல்லும் சாலைகள் போக்குவரத்து நெரிசல் நிறைந்து காணப்படுகிறது. தினசரி 1 லட்சம் வாகனங்கள் செல்லும் வழித்தடமாக கணக்கிடப்பட்டுள்ள இதற்கு மாற்று வழித்தடமாக புரோக்கன் பிரிட்ஜ் பாலத்தை பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் தற்போது அடையார் திரு.வி.க மேம்பாலத்தில் இருந்து - துர்கா பாய் தேஷ்முக் சாலை - பசுமை வழி சாலை - டி.ஜி.எஸ் தினகரன் சாலை - சாந்தோம் நெடுஞ்சாலை வழியாக மெரினா கடற்கரை சாலையை சென்றடைய வேண்டியுள்ளது. ஆனால் பட்டினம்பாக்கம் கடற்கரையோடு - பெசன்ட் நகர் இணைக்கப்பட்டால் தூரம் மற்றும் நேரம் இரண்டுமே கணிசமாக குறையும் வாய்ப்பு ஏற்படும் எனச் சொல்லப்படுகிறது.

ஆனால் இதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இது குறித்து சுற்றுசூழல் ஆர்வலர் சரவணன், பேசியபோது “ கடலோர பாதுகாப்பு மண்டலத்தின் கீழ் வரும் இந்த பகுதியில் விரைவு போக்குவரத்து சாலைகள் திட்டம் செயல்படுத்தப்பட்டால், விதவிதமான பறவைகள் சுற்றி திரியும் இயற்கை சூழல், சுத்தமான காற்று என சுற்றுசுழல் கடுமையாக பாதிக்கப்படும். மேலும் அதனுடன் கடற்கரை பகுதியை நம்பி வாழ்வை நகர்த்தும் மீனவர்கள் வாழ்வாதாரமும் கேள்விக் குறி ஆகும். ஏனெனில் அவர்கள் இந்த இடத்தில் மீன் வலைகளை காய வைத்தல், அவற்றை சரி செய்தல் போன்றவற்றில் ஈடுபடுகின்றனர்” எனக் கூறினார்.

மேலும் சுற்றுச் சூழல் ஆர்வலர் சாரதா பேசும்போது “ கட்டடங்களும், சாலைகளும் நிறைந்த சென்னையில் மேலும் ஒரு சாலையை உருவாக்குவதை விட, வாகனமில்லா போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் இயற்கை சூழல் பூங்காவை உடைந்த பாலத்தில் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் நீருக்கு நடுவில் நடைபயணம் மேற்கொள்ள, சைக்கிள் ஓட்ட, குடும்பத்துடன் அமர்ந்து இயற்கையை ரசிக்க இருக்கைகள் போன்றவற்றை அமைத்து அதனை சிறந்த சுற்றுலா தலமாக மாற்றுவதற்கான திட்டமும் சென்னை மாநகராட்சியிடம் வழங்கப்பட்டுள்ளது.” என்றார்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது முதற்கட்டமாக கடற்கரை நோக்கி வாகனங்கள் செல்வதற்கான சாலை உருவாக்குவதற்கான திட்ட அறிக்கை உருவாக்கப்பட்டு வருவதாக கூறினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com