திருடனை விரட்டி பிடித்த சிறுவன்: நேரில் அழைத்து கமிஷனர் பாராட்டு
சென்னையில் பெண் மருத்துவரிடம் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற திருடனை மடக்கிப் பிடித்த சிறுவனுக்கு காவல் ஆணையர் விஸ்வநாதன் பாராட்டி வெகுமதி வழங்கினார்.
சென்னை, அண்ணாநகரில் அமுதா (50) என்பவர் மருத்துவமனை நடத்தி வருகிறார். இவரது மருத்துவமனைக்கு நேற்றிரவு இளைஞர் ஒருவர் வந்து, மருத்துவ ஆலோசனைகள் குறித்து கேட்டுள்ளார். இரவு கிளினிக்கை மூடும் நேரம் என்பதால், ஊழியர்கள் யாரும் இன்றி அமுதா மட்டும் தனியாக இருந்துள்ளார்.இதை நோட்டமிட்டுக் கொண்ட அந்த இளைஞர், அங்கிருந்து சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து அந்த இளைஞர் முகத்தில் துணியை கட்டிக்கொண்டு வந்து, தனியாக இருந்த அமுதாவை மிரட்டி அமுதாவின் கழுத்தில் இருந்த 10 சவரன் தங்கச்சங்கிலியை அந்த இளைஞர் பறித்துக்கொண்டு ஓடியுள்ளார்.
‘திருடன் திருடன்’ என்று அமுதா அலற, சத்தம் கேட்டு எதிரே உள்ள கடை ஒன்றில் இருந்து சிறுவன் ஒருவர் ஓடிவந்துள்ளார். சூர்யா (17) என்ற அந்த சிறுவன், தனது சகோதரரின் கடைக்கு நேரம் கிடைக்கும் போது வந்து செல்வார். அதுபோல தான் இந்த முறையும் வந்திருந்தார். சூர்யா ஓடி வந்து பார்த்தபோது, திருடன் சுவரை ஏறிக்குதித்து ஓடியுள்ளான். அதைக் கண்டதும் திருடன் யாராவது பிடியுங்கள் என்று கத்திக்கொண்டே, விரட்டத் தொடங்கியுள்ளார் சூர்யா. சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் ஓடிச் சென்று திருடனை துரத்தி பிடித்து நகைகளை மீட்டுள்ளார்.
இதனையடுத்து அந்த சிறுவனை நேரில் அழைத்த சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன், வெகுமதி வழங்கி பாராட்டு தெரிவித்தார். சிறுவன் சூர்யா பலருக்கும் முன்னுதாரணமாக இருப்பதாக பாராட்டு தெரிவித்தார். மேலும் குற்றத்தை தடுக்கவும், குற்றவாளிகளை பிடிக்கவும் மக்களின் உதவி முக்கியமானது எனக் கூறினார். அப்போது பேசிய சிறுவன் திருடனை துரத்திச் சென்றபோது பொதுமக்கள் யாரும் உதவி செய்யவில்லை.திருடனை பிடிக்க வருமாறு கூறியும் யாரும் முன் வரவில்லை எனக் கூறினார்.