கடும் வெயிலில் காக்கவைக்கப்பட்ட குழந்தைகள்; கொந்தளித்த பெற்றோர்! வருத்தம் தெரிவித்தார் பிரபுதேவா !

சென்னையில் நடிகர் பிரபுதேவா-வுக்காக கடும் வெயிலில் குழந்தைகளை காக்க வைத்ததாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பிரபு தேவா
பிரபு தேவாpt web

எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடிகரும் நடன இயக்குநருமான பிரபுதேவாவின் 100 பாடல்களுக்கு குழந்தைகள், பெரியவர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒன்றரை மணி நேரத்தில் நடனம் ஆட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நடிகர் பிரபுதேவா முன்னிலையில் நம்ம மாஸ்டர் என்ற பெயரில் நடனம் ஆடி உலக சாதனை நிகழ்த்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி நடனம் ஆடுவதற்கு வந்திருந்தனர். வெளிமாநில, வெளிநாட்டு நடனக் குழுவைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.

ஏராளமான குழந்தைகளும் காலை 5 மணியிலிருந்தே காத்திருந்தனர். காலை 7 மணிக்கு நிகழ்ச்சி தொடங்குவதாக இருந்த நிலையில் நடிகர் பிரபுதேவா சற்று நேரத்தில் வந்துவிடுவார் என அறிவிக்கப்பட்டது. காலையிலேயே கடும் வெப்பம் இருந்ததால் குழந்தைகளும் வெயிலிலேயே காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் சற்று நேரத்தில் பிரபுதேவா வந்துவிடுவார் என தொடர்ந்து அறிவிக்கப்பட்டதால், ஒருகட்டத்தில் பொறுமை இழுந்த பெற்றோர், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, பெற்றோரின் கோரிக்கைக்கு ஏற்ப பிரபுதேவா வருவதற்கு முன்னதாகவே நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அப்போது, ஹைதராபாத்தில் இருக்கும் பிரபுதேவாவுக்கு உடல்நலம் சரியில்லாததால் அவர் வீடியோ காலில் இணைவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி வீடியோ காலில் இணைந்த பிரபுதேவா, இதுவரை ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிக்கு தான் செல்லாமல் இருந்ததில்லை என கூறி அனைவரிடமும் வருத்தம் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com