சென்னை: தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார் - ஜேசிபி உதவியுடன் பத்திரமாக மீட்பு
செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்
சென்னை, மதுரவாயல் எம்ஜிஆர் பல்கலைக்கழகம் அருகே அடையாளம்பட்டு கூவம் தரைப்பாலம் உள்ளது. கனமழை காரணமாக இந்த தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. இந்நிலையில் இன்று அதிகாலை முகப்பேரைச் சேர்ந்த சுனில் வர்க்கீஸ் (54) என்பவர் தனது சொகுசு காரில் ஆபத்தை உணராமல் தரைப்பாலத்தை கடக்க முயன்றுள்ளார்.
அப்போது கார், வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்த தடுப்புகளில் சிக்கிக் கொண்டது. இதுதொடர்பாக தகவல் அறிந்து வந்த மதுரவாயல் போலீசார், காரின் கண்ணாடியை உடைத்து உயிருக்கு போராடிய காரின் உரிமையாளரை சினிமா பாணியில் மீட்டனர். அதைத் தொடர்ந்து ஜேசிபி இயந்திரம் உதவியுடன் கயிறு கட்டி கரையும் மீட்டனர்.
தற்போது கார், ஓடும் வெள்ளத்தில் இருந்து மீட்கப்படும் அந்த பரபரப்பு காட்சிகள் வெளியாகி உள்ளன. தரைப்பாலங்களில் வெள்ளம் சென்றால் அதை கடந்து செல்லக் கூடாது எனவும், அதையும் மீறி சென்றால் இது போன்ற அசம்பாவிதங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் போலீசார் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.