சென்னை: Transformer-ல் சிக்கிய காத்தாடியை எடுக்க முயன்று தலைகீழாக தொங்கிய சிறுவனால் பரபரப்பு
சென்னை பூவிருந்தவல்லி அருகே மேப்பூர்தாங்கல் பகுதியைச் சேர்ந்த பில்லா என்பவரது மகன் சஞ்சய். 10 ஆம் வகுப்பு தேர்வெழுதி முடிவுக்காக காத்திருக்கும் இவர், மேப்பூர்தாங்கல் பகுதியில் உள்ள மின் ட்ரான்ஸ்ஃபார்மரில் சிக்கியிருந்த காத்தாடியை எடுக்க ட்ரான்ஸ்ஃபார்மர் மீது ஏறியுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட அவர், பலத்த காயங்களுடன் ட்ரான்ஸ்பார்மரில் தலைகீழாக தொங்கியுள்ளார்.
இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டு, பூவிருந்தவல்லி அரசு மருத்துமனயில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது மேல் கிச்சைக்காக கே.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆபத்தை உணராமல் ட்ரான்ஸ்ஃபார்மர் மீது ஏறிய சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்து, அவர் விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து நசரத்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது கோடை விடுமுறை என்பதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திருட்டுத்தனமாக பட்டம் மற்றும் மாஞ்சா நூல்கள் விற்பனை நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். உரிய ஆய்வு மேற்கொண்டு முழுமையாக விற்பனையை தடுக்க காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.