கொரோனா கால மகத்துவர்: ஆதரவற்றோருக்கு உணவளிக்கும் சென்னை பேராசிரியர்கள், மாணவர்கள் குழு
சென்னையில், ராயப்பேட்டை புது கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து ஆதரவற்றோருக்கு உணவு பொட்டலங்களை வழங்கு வருகிறார்கள். அந்தவகையில், இவர்கள் இணைந்து பிரியாணி பொட்டலங்களை ஆதரவற்றோருக்கு வழங்கி வருகின்றனர்.
கொரோனா ஊரடங்கு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஒருவேளை உணவுக்கு வழியில்லாமல் ஆதரவற்றோர்கள், நடைபாதை வாசிகள் என பலர் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள், தொழில் நிறுவனங்கள் என பல தரப்பினர் உணவு வழங்கி வருகின்றனர். ஊரடங்கு நேரத்தில், பசியில் யாரையும் தவிக்க விடாமல் இருக்க தங்களால் ஆன உதவிகளை பலரும் செய்து வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள புது கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து தினமும் 600 பேருக்கு பிரியாணி பொட்டலங்களை வழங்கி வருகிறார்கள்.
இவர்களின் கொடுக்கும் மதிய உணவுக்காக, அந்த பகுதியில் 200க்கும் மேற்பட்டோர் காலை 11 மணியிலிருந்து வரிசையில் காத்திருந்து முறையாக அவற்றை பெற்று செல்கின்றனர். 11:30 க்கு உணவு பொட்டலங்களை வழங்க தொடங்கும் போது, மதிய உணவு பொட்டலம் மற்றும் தண்ணீர் பாட்டீல்களை வாங்க, நீண்ட வரிசை இருக்கிறது. இது குறித்து இந்த நற்பணி குழுவை ஒருங்கிணைக்கும் கல்லூரியின் ஆசிரியர் ஹைதர் அலி தெரிவிக்கும் போது, "முதல் அலையின் போதே ஊரடங்கு காலங்களில் முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள், கல்லூரி நிர்வாகம் துணையுடன் உணவு பொட்டலங்களை வழங்கி வந்தோம்.
தற்போது கொரோனா பொது முடக்கம் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், முன்னாள், இந்நாள் மாணவர்கள் பலர் தாமாகவே முன் வந்து உணவும் பொட்டலங்களை ஏழை மக்களுக்கு சேர்க்கும் பணியில் தங்களை ஈடுபடுத்தி கொண்டனர். முக்கியமாக வணிகத்துறை மாணவர்கள் தன்னார்வளர்களாக இருக்கிறார்கள். முன்னாள் மாணவர்களும்கூட, பிரியாணியை தயார் செய்யும் பணியை எடுத்து செய்கின்றனர்.
மெரினா, ராயப்பேட்டை, சேப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சாலை ஓரங்களிலும், பாலத்திற்கு அடியிலும் தங்கும் ஆதரவற்றோர் மற்றும் நடைபாதை வாசிகள் அதிகமாக காணப்படுவர். மதிய உணவாக நாங்கள் வழங்கும் உணவையே பிரதானமாக எதிர்பார்த்து 300க்கும் மேற்பட்டோர் நாள்தோறும் காத்திருப்பர். மாணவர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஆசிரியர்களும், புது கல்லூரி நிர்வாகமும் ஈடுபட்டுள்ளது" எனக் கூறினார் அவர்.
"நாங்கள் வழங்கி வரும் உதவிகளை பார்த்து மற்ற ஆசிரியர்கள், மாணவர்கள் தரப்பில் நிறைய உதவிகள் வருகிறது. தன்னார்வ குழுவில் தங்களை இணைத்து கொண்ட மாணவர்கள் சார்பில், அடுத்த வாரத்தில் இருந்து 1000 பேருக்கு வழங்க திட்டமிட்டுருக்கிறோம்" எனக் கூறியுள்ளனர்.
ஆசிரிய மாணவ பந்தம் வகுப்பறையோடு, முடிவடையாமல் இந்த பெருந்தோற்று காலத்தில் தெருமுனையில் பசியால் வாடுபவர்களுக்கு பசியாற்றும் பந்தமாக தொடர்கிறது. இது பிற இடங்களிலும் தொடரட்டும்; மற்ற இடங்களுக்கும் பரவட்டும்; இது போன்ற கல்விச்சாலைகளில் நிகழும் அறப்பணிகள்!
- ந.பால வெற்றிவேல்