சென்னை | கல்லூரி மாணவரை மிரட்டி செல்போனை பறிக்க முயற்சி - 3 சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது
செய்தியாளர்: சாந்த குமார்
சென்னை, பெருங்குடி, சிபிஐ காலனியைச் சேர்ந்தவர் ஆதித்யா (21). கல்லூரியில் படித்து வரும் இவர், முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் பேரன் என கூறப்படுகிறது. இந்நிலையில், இவர் கடந்த 15ந் தேதி அதிகாலை அவரது நண்பர்களை பார்த்து விட்டு, காரில் ஓஎம்ஆர் சாலை வழியாக வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது தரமணியில் உள்ள தேசிய ஆடை வடிவமைப்பு கல்லூரி அருகே வந்து கொண்டிருந்தபோது, காரின் பம்பர் சாலையில் உரசும் சத்தம் கேட்டு காரை நிறுத்தி விட்டு இறங்கி காரின் பின்பக்கத்தை பார்த்துள்ளார்.
அப்போது அங்கு இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், ஆதித்யாவை மிரட்டி செல்போன் மற்றும் கார் சாவியை கேட்டுள்ளனர். ஆதித்யாவின் சத்தம் கேட்டு அருகிலிருந்த பொதுமக்கள் ஓடி வந்தனர். இதனையடுத்து 6 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இது குறித்து ஆதித்யா தரமணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
இதில், பெருங்குடியைச் சேர்ந்த முகேஷ் (20), சங்கர் (19), ஶ்ரீகாந்த் (21) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து ஆறு பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து வழிப்பறிக்கு பயன்படுத்திய 2 இரண்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து ஆறு பேரையும் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர்களை சென்னையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர். மற்ற மூன்று பேரையும் சிறையில் அடைத்தனர்.