மோசடி வழக்கு
மோசடி வழக்குPT

“இவர் அவரே இல்லை” - நீதிமன்றத்தில் மெகா ட்விஸ்ட்! போலீசுக்கே ஷாக் கொடுத்த 15 வருட அடேங்கப்பா மோசடி!

15 ஆண்டுகளாக மனைவி, காவல்துறை, நீதிமன்றத்தை ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றி வந்த 59 வயது பலே குற்றவாளி.
Published on


சென்னை: 15 ஆண்டுகளாக மனைவி, காவல்துறை, நீதிமன்றத்தை ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றி வந்த 59 வயது பலே குற்றவாளி. சிறை தண்டனைக்குள் அண்ணனை சிக்க வைத்த "பாசக்கார" தம்பி, நீண்ட தேடுதல் வேட்டைக்கு பிறகு கைது.

ஆள்மாறாட்டம் செய்து பலவிதமான மோசடிகளை கேள்விபட்டிருப்போம். ஆனால், தண்டனை பெற்ற குற்றவாளி தனக்கு பதில் தனது சகோதரனை சிக்க வைத்து தலைமறைவாகி 15 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ள சுவாரஸ்யமான அதிர்ச்சிகரமான சம்பவம் சென்னையில் அரங்கேறி உள்ளது. 

Fraud
FraudPT Desk

2009 - நடந்தது என்ன?

கடந்த 2009 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மற்றும் லூர்து மேரி தம்பதியினர் சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் ஒன்பதாவது தெருவில் வாடகை வீட்டில் குடியேறி வசித்து வந்துள்ளனர். அப்போது இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வரதட்சணை கொடுமை செய்ததாக கூறப்பட்டது. இதனையடுத்து லூர்து மேரி தனது கணவர் மீது கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் 2009 ஆம் ஆண்டு புகார் அளித்தார்.

புகாரின் பேரில் பன்னீர்செல்வத்தை போலீசார் அப்போதே கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், இந்த வழக்கானது சென்னை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்ற போது பன்னீர்செல்வத்திற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனைத் தொடர்ந்து பன்னீர்செல்வம் இந்த உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வழக்கு தொடுத்தார். அந்த வழக்கில் மூன்று ஆண்டுகளாக குறைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கடந்த 2021 ஆம் ஆண்டு பன்னீர்செல்வம் டெல்லி உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தார். ஆனால், வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது. மேலும், நீதிமன்றத்தில் சரணடையுமாறும் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் பன்னீர்செல்வம் தலைமறைவானார்.  இதனையடுத்து கடந்த ஜனவரி மாதம் பன்னீர்செல்வத்துக்கு எதிராக நீதிமன்றம் பிடி வாரண்ட் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனால், கோடம்பாக்கம் தனிப்படை போலீசார் காஞ்சிபுரம் கோவிந்தவாடி அகரம் பகுதிக்குச் சென்று அங்கு இருந்த 62 வயதான பன்னீர்செல்வத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

”இவர் அவரே  இல்லை” - நீதிமன்றத்தில் மெகா ட்விஸ்ட்!

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் நீதிமன்ற உதவியாளர் இந்த வழக்கில் தொடர்புடைய பன்னீர்செல்வம் இவர் அல்ல என கூறிய போது போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நீதிபதி, பன்னீர்செல்வத்தை பார்த்து இந்த வழக்கு குறித்த விவரங்களை கேட்டபோது நான் தான் பன்னீர்செல்வம் எனவும் ஆனால் நீங்கள் தேடும் நபர் நான் அல்ல எனவும் கூறியுள்ளார்.

மேலும், தனது தம்பி பழனி தான் காவல்துறை மற்றும் நீதிமன்றம் தேடும் குற்றவாளி எனவும் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த நீதிமன்றம் மற்றும் போலீசார் ஒன்றும் புரியாமல் நிற்க, நீதிபதி விசாரணை மேற்கொண்டு உண்மையை கண்டறியுமாறு கூறியுள்ளார். அதிர்ந்துபோன கோடம்பாக்கம் போலீசார் பன்னீர்செல்வத்தை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்ட போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

விசாரணையில் திடுக்கிடும் தகவல்! இதுதான் முதல் பொய்..

குறிப்பாக பன்னீர்செல்வத்தின் தம்பி பழனி(59) என்பவர் தான் இந்த வழக்கின் குற்றவாளி என்பது தெரியவந்தது. பின் எப்படி பழனிக்கு பதில் பன்னீர்செல்வம் ஆள்மாறட்டும் செய்யப்பட்டார்? என்பது குறித்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். பழனி என்பவருக்கும் லூர்து மேரி என்பவருக்கும் 2009 ம் ஆண்டு முறைப்படி திருமணம் ஆகாமல் இருவரும் சென்னையில் குடியேறி குழந்தைகள் பெற்றுக் கொண்டதும் இதனால் குடும்பத்தை விட்டு பழனி ஒதுக்கி வைக்கப்பட்டதும் தெரிய வந்தது. இந்த நிலையில் லூர்து மேரியிடம் தன்னை பன்னீர்செல்வம் என்று பழனி கூறி திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது.

பின்னர், ஏற்பட்ட சண்டையில் 2009 ஆம் ஆண்டு லூர்து மேரி தன் கணவர் பழனி என நினைத்து பன்னீர்செல்வம் பெயரில் வாழ்ந்து வந்த நபர் (பழனி) மீது கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அப்போதே பன்னீர் செல்வம் என்ற பெயரில் வாழ்ந்த பழனி  போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

கிரிமினலாக மோசடி ஆதாரங்களை திரட்டியது எப்படி..? 

விசாரணையிலும் தன்னை பன்னீர்செல்வம் என்று அடையாளப்படுத்திக் கொண்ட பழனி, தனது அண்ணன் பெயரில் இருந்த ஆவணங்களையும் கொடுத்துள்ளார். இதன் பின்பு சிறையில் அடைக்கப்பட்ட பழனி, பன்னீர்செல்வம் என்ற பெயரில் சிறையில் இருந்ததும் பின் வெளியே வந்து பன்னீர்செல்வம் என்ற பெயரில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததும் பின் நீதிமன்றம் சிறை தண்டனையை உறுதிப்படுத்தியவுடன் தலைமறைவாகிவிட்டு தனது அண்ணன் பன்னீர்செல்வத்தை சிக்க வைத்ததும் தெரிய வந்தது.

குறிப்பாக பன்னீர் செல்வம் என்ற பெயரிலேயே போலி ஆவணங்களை தயாரித்து டுபாக்கூர் வேலையை செய்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பழனி கைது செய்யப்படுவதற்கு முன்பு நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவரிடம் உதவியாளராக பணிபுரிந்து வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

காரணமாய் அமைந்த போலீசின் அவசரகதி விசாரணை.. 

2009 ஆம் ஆண்டு கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த போலீசார் சரியான விசாரணையை மேற்கொள்ளாமல் துரிதகதியில் செயல்பட்டதால் இப்படி ஒரு சிக்கல் நிகழ்ந்திருப்பதாக தற்போது கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீசாருக்கு சிக்கல் எழுந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதனால், 15 ஆண்டுகளுக்கு முன் உள்ள வழக்கை தோண்டி எடுக்க வேண்டிய நிலைக்கு தற்போது கோடம்பாக்கம் போலீசார் தள்ளப்பட்டனர்.

இதனால் பழனி மீது மேலும் ஒரு வழக்கை கோடம்பாக்கம் போலீசார் பதிவு செய்தனர். ஆள்மாறாட்டம், ஆவண மோசடி உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 15 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட பழனி புகைப்படத்தை வைத்து தற்போது கோடம்பாக்கம் போலீசார் அவரை கைது செய்வதற்காக தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். 

சிக்கியது எப்படி?

இந்த நிலையில் கடந்த ஜூன் மாதத்திலிருந்து பழனியை தீவிரமாக தேடி வந்த நிலையில் சென்னை கீழ்க்கட்டளை பகுதியில் அவரையொத்த முக அடையாளத்துடன் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக ஒருவர் வேலை செய்வது தெரியவந்தது. இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் அவரிடம் சாதரணமாக பேச்சுக்கொடுத்த போது தன்னை பன்னீர் செல்வம் என்று கூறியுள்ளார்.

மோசடி வழக்கு
உ.பி | சகோதரனை விரட்டிய கும்பல்.. துப்பாக்கிச் சூட்டில் தவறுதலாக பறிபோன 8 வயது சிறுமியின் உயிர்!

உடனே அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணையில் ஈடுப்பட்ட போது தான் பழனி என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். போலீசார் தொடர் விசாரணையில் தனக்கு சிறை செல்ல விருப்பம் இல்லை எனவும் அதனால் உருவ ஒற்றுமையில் சற்றே தன்னை போல இருக்கும் தனது அண்ணனை சிக்க வைக்க பெயரை மாற்றிக்கூறி அதற்குறிய ஆவணங்களை தயார் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், நீதிமன்றத்தில் வழக்கறிஞரின் உதவியாளராக பணி புரிந்ததால், அந்த அறிவை வைத்து போலி ஆவணங்களை தயார் செய்ததாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார். 

சிறையில் உண்மைக் குற்றவாளி!

இதனையடுத்து மனைவியை கொடுமைப்படுத்திய வழக்கு, ஆள்மாற்றம் வழக்கு என இரண்டு வழக்குகளிலும் கைது செய்த கோடம்பாக்கம் போலீசார் பழனியை சிறையில் அடைத்தனர்.

உடன் பிறந்த அண்ணனை சிறை தண்டனைக்குள் சிக்கை வைக்க 15 ஆண்டுகளாக மனைவி, காவல்துறை, நீதிமன்றத்தை ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றி வந்த 59 வயது குற்றவாளி தற்போது கைது செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com