சென்னை ஜிபிஎஸ் நோய் | மக்கள் அச்சமடையத்தேவையில்லை - மருத்துவர் தேரணிராஜன்
சென்னையில் அரசு குழந்தைகள் மருந்துமனையில் ஜிபிஎஸ் நோயால் 9 வயது சிறுவன் உயிரிழந்துள்ளது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜிபிஎஸ் நோய் குறித்து யாரும் அச்சமடைய வேண்டாம் என மருத்துவமனை டீன் தேரணி ராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 9 வயது சிறுவனுக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டதால், அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு Guillain-Barré syndrome குலியன் பேரி சின்ரோம் எனும் ஜிபிஎஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்ததை அடுத்து அச்சிறுவனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இருப்பினும் தொடர் சிகிச்சையில், சிறுவனின் உடல்நலத்தில் முன்னேற்றம் இல்லாததால், மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கால்களில் உணர்ச்சியற்ற நிலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனளிக்காத நிலையில் அவர் உயிரிழந்தார்.
சிறுவனின் இறப்பை அடுத்து மக்கள் அச்சமடைந்து வரும் நிலையில், ”இது குறித்து யாரும் அச்சமடையவேண்டாம், ஒரு லட்சம் பேரில் ஒன்று அல்லது இரண்டு பேருக்கு நோய் எதிர்ப்பு மண்டலத்தில் உண்டாகக் கூடிய பாதிப்பே ஜிபிஎஸ் நோய்” என்கிறார் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தலைவர் தேரணி ராஜன்.
மேலும் அவர் இந்நோய் குறித்து பேசுகையில், ”திருவள்ளூர் மாவட்டத்தில் ஜிபிஎஸ் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்கு வந்ததால் தான் காப்பாற்ற முடியவில்லை. ஆரம்பகட்டத்திலேயே சிகிச்சையை எடுத்துக் கொண்டிருந்தால் உயிரிழப்பு தடுக்கப்பட்டிருக்கலாம். இந்த நோய் சிகிச்சைக்கான மருந்துகள் அரசு மருத்துவமனைகளிலேயே இருக்கிறது” என தேரணி ராஜன் தெரிவித்துள்ளார்.