சென்னை: தனியார் டைல்ஸ் நிறுவனத்தில் ஐடி ரெய்டு - 220 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு
சென்னையில் தனியார் டைல்ஸ் நிறுவனம், 220 கோடி ரூபாய் அளவுக்கு வருவாயை மறைத்து வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்திலிருந்து சுமார் 8 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இயங்கி வரும் தனியார் டைல்ஸ் நிறுவனம் ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது. மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் டைல்ஸ்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் இந்நிறுவனம் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கிடைத்த தகவல்படி, அந்நிறுவனம் மற்றும் அதற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை, மதுரை, கோவை மாவட்டம் மற்றும் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள அந்நிறுவனத்துக்கு சொந்தமான இடங்கள் என 20 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. இதில், கணக்கில் காட்டப்படாத 8.30 கோடி ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், 120 கோடி ரூபாய் வருமானத்தை மறைத்திருப்பதையும், 100 கோடி ரூபாய் அளவில் போலி நிறுவனங்களில் பங்குகள் வைத்திருப்பதையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

