பலத்த காற்று... சென்னை- திருச்சி விமான சேவை பாதிப்பு
திருச்சியில் பலத்த காற்று வீசி வருவதன் காரணமாக சென்னை- திருச்சி விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக கடலோரப்பகுதிகளை அச்சுறுத்திவந்த கஜா புயல் சுமார் 9 மணிநேரத்திற்குப்பிறகு கரையை கடந்தது. தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 100 கி.மீ முதல் 110 கி.மீ வரையிலான வேகத்தில் கஜா புயல் கரையைக் கடந்ததாக சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார். கஜா புயல் காரணமாக தஞ்சையில் 5 பேர் உட்பட தமிழகம் முழுவதும் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் கஜா புயலால் 12 ஆயிரம் மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. மின் விநியோகம் சரியாக இன்னும் ஒரு சில நாட்கள் ஆகும் எனத் தெரிகிறது.
கஜா புயல் காரணமாக திருச்சியிலும் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் சென்னை- திருச்சி விமான சேவையில் பாதிப்பு எற்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 36 பயணிகளுடன் திருச்சி சென்ற இண்டிகோ விமானம் பலத்த காற்று வீசியதால் பயணிகளை இறக்கி விட முடியாமல் மீண்டும் சென்னை திரும்பியது. கஜா புயல் காரணமாக சென்னை- திருச்சி ஏர் இந்தியா விமான சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.