தமிழ்நாடு
“தமிழகத்தில் வெப்பநிலை அதிகமாக இருக்கும்” - வானிலை மைய இயக்குநர்
“தமிழகத்தில் வெப்பநிலை அதிகமாக இருக்கும்” - வானிலை மைய இயக்குநர்
வரும் நாட்களில் சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கத்திரி வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஊரடங்கினால் மக்கள் வீட்டிலேயே முடக்கப்பட்டு இருந்தாலும்கூட அதிக சிரமத்திற்கு ஆளாகியே உள்ளனர். இதனிடையே வங்காள விரி குடாவில் மெதுவாக ஒரு சூறாவளி உருவாகி வருவதாகவும் ஆகவே வரும் நாட்களில் சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை மையத்தின் இயக்குநர் புவியரசன் கூறியுள்ளார்.
இது குறித்து ‘தி நியூஸ் மினிட்’ தளத்திற்குப் பேசிய அவர், “தற்போது அந்தமான் தீவுகளில் ஒரு குறைந்த அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இது மே 15 (வெள்ளிக்கிழமை) மந்த நிலையாகவும், மே 16 (சனிக்கிழமை) சூறாவளியாகவும் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது வடமேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது. இது மேலும் வடக்கு-வடகிழக்கு திசையை நோக்கி நகரும் ”என அவர் கூறியுள்ளார். மேலும் "இது ஒரு சூறாவளியாக மாறியதுடன்தான் இன்னும் அதைத் துல்லியமாகக் கண்காணிக்க முடியும்" என்று அவர் விளக்கியுள்ளார்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை என்ன மாதிரியான மாற்றங்கள் இருக்கும் என்ற கேள்விக்கு அவர் "வெப்பநிலையில் சிறிதளவு அதிகரிப்பு இருக்கும்” எனக் கூறியுள்ளார்.