`10-வது படிக்கிறப்போலருந்துதான் பார்வையில்லை...’-கலெக்டரிடம் கல்லூரி மாணவியின் கண்ணீர் மனு

`10-வது படிக்கிறப்போலருந்துதான் பார்வையில்லை...’-கலெக்டரிடம் கல்லூரி மாணவியின் கண்ணீர் மனு
`10-வது படிக்கிறப்போலருந்துதான் பார்வையில்லை...’-கலெக்டரிடம் கல்லூரி மாணவியின் கண்ணீர் மனு

பார்வையிழந்த கல்லூரி மாணவி மீண்டும் பார்வை கிடைக்க மருத்துவ உதவி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த சம்பவம் செங்கல்பட்டில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பின்னப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி, இவருக்கு மூன்று மகள்கள்  உள்ளனர். இதில் இளைய மகள் நிவேதா (19), தற்போது செங்கல்பட்டு அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

நிவேதாவுக்கு பத்தாம் வகுப்பு படிக்கும்போது லேசாக கண் பார்வை மங்கியுள்ளது. பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வு எழுதுவதற்கு கூட கண் பார்வை போதிய அளவில் இல்லாமல் மங்கிப் போயிருந்த நிலையிலும் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அடைந்துள்ளார் நிவேதா. இதனையடுத்து, அவரது தந்தை கோவிந்தசாமி தனது மகளை மருத்துவமனை அழைத்துச்சென்று பரிசோதித்ததில், நிவேதாவுக்கு கண்ணில் எந்த குறைபாடும் இல்லை என்று கூறிய மருத்துவர்கள், அவரின் கண்களுக்கும் மூளைக்கும் செல்லும் நரம்பு மண்டலத்தில் கட்டி இருப்பதாக கூறியுள்ளனர்.

தொடர்ந்து கடந்த 2019 ம் ஆண்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நிவேதாவின் பார்வை முழுமையாக பறிபோன நிலையில், அப்போது அவரது தந்தை கோவிந்தசாமியிடம் மருத்துவர்கள் சிறிய வயது பெண் என்பதால் நாளடைவில் கண்பார்வை மீண்டு வந்துவிடும் என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இதைத்தொடர்ந்து கோவிந்தசாமி தன் மகளை அழைத்துக்கொண்டு வந்துள்ளார்.

அதனை தொடர்ந்து நிவேதா, தனது இரண்டாவது சகோதரியின் உதவியால் 12 ம் வகுப்பு தேர்வுக்கு தயாராகியுள்ளார். பின் ஆசிரியர் உதவியுடன் +2 தேர்வை எழுது வெற்றிக்கண்டுள்ளார். தற்பொழுது அரசு கல்லூரியில் பி.ஏ.ஆங்கில இலக்கியம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். நிவேதாவிற்கு இந்த மூன்று ஆண்டுகளில் பல்வேறு மருத்துவமனைகளில் ஆங்கில மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவம் பார்த்தும், மருத்துவர்கள் கூறியது போல் கண் பார்வை கிடைக்கவில்லை.

இதனால் இன்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு தந்தையுடன் சென்ற மாணவி நிவேதா, மாவட்ட ஆட்சியர் இராகுல் நாத்திடம் தனக்கு மீண்டும் கண்பார்வை வர உரிய சிகிச்சை தருமாறு மாவட்ட ஆட்சியர் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டுமென்றும், உயரிய சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை மனு அளித்தார்.

தனியார் நிறுவனமோ அரசோ நிவேதாவின் கண் பார்வைக்கு உதவி செய்து உயரிய சிகிச்சை அளிக்கப்பட்டால் மட்டுமே மீண்டும் கண் பார்வை கிடைக்கும் என்பதால் உதவிக்கரம் நீட்ட நிவேதாவிற்கு உதவும் உள்ளங்கள் உதவ வேண்டுமென கோரிக்கை முன்வைக்கிறார் அவர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com