கர்நாடக மாநிலம் கொப்ளி மாவட்டத்தைச் சேர்ந்த ஜம்பைய்யா மற்றும் அனுமந்தன் ஆகிய இருவரும் செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் பகுதியில் கூடாரம் அமைத்து வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ரவி, சுரேஷ், மஞ்சுநாதன் என 3 மகன்கள் உள்ளனர். அவர்களில் ரவி, சுரேஷ் ஆகிய இருவரும் காது கேளாத மாற்றுத்திறனாளிகள்; மஞ்சுநாதன் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. கர்நாடகாவில் தசரா பண்டிகையை முன்னிட்டு பள்ளி விடுமுறை என்பதால் அம்மா அப்பாவை பார்ப்பதறாகாக ஊரப்பாக்கத்திற்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த சிறுவர்கள் மூவரும் ஊரப்பாக்கம் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் விளையாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது ரயில் வருவதை கவனிக்காத சிறுவர்கள் மீது சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி வந்த மின்சார ரயில் மோதிவிட்டது. இவ்விபத்தில் மூன்று சிறுவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் சிறுவர்களின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெளிமாநிலத்தைச் சேர்ந்த 3 மாற்றுத்திறனாளி சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.