‘எல்லாம் எங்களுக்கு தெரியும்’: கடுமையாக சாடிய நீதிபதி
ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கக்கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கக்கூடாது என முறையிட்டவரை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கடுமையாக சாடினார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அதிமுக அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள், முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிராக வாக்களித்தனர். முதல்வருக்கு எதிராக வாக்களித்தவர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி திமுக கொறடா சக்கரபாணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல்குத்தூஸ் அமர்வில் 2 மணியளவில் இந்த வழக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
இதனிடையே ஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கக்கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கக் கூடாது என சென்னை பெரம்பூரை சேர்ந்த தேவராஜ் என்பவர் தலைமை நீதிபதியிடம் முறையீடு செய்தார். 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்திற்கு எதிரான வழக்கில் தீர்ப்பு வழங்கிய பின்னர் தான் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்க வேண்டும் எனவும் முறையிட்டார். அப்போது ‘எந்த தீர்ப்பை எப்போது வழங்க வேண்டும் என எல்லாமும் நீதிமன்றத்திற்கு தெரியும்’ என நீதிபதி கடுமையாக சாடினார். மேலும் 18 எம்எல்ஏக்கள் வழக்கை வேறு அமர்வு விசாரித்துள்ள நிலையில் இந்த அமர்வில் எப்படி முறையிடுவீர்கள் எனக் கேட்ட நீதிபதி நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் என எச்சரித்ததோடு அவரை வெளியேற்ற காவலர்களுக்கு உத்தரவிட்டார். அப்போது ‘நான் தீவிரவாதியல்ல. தமிழில் பேசினால் வெளியேற்றுவீர்களா?’ என ஆத்திரத்துடன் பேசிய தேவராஜ் நீதிமன்றத்தில் இருந்து வெளியேறினார்.