திருமண ஸ்தலமாக மாறிய சின்னாறு சோதனைச் சாவடி - எளிமையாக நடைபெறும் திருமணங்கள்

திருமண ஸ்தலமாக மாறிய சின்னாறு சோதனைச் சாவடி - எளிமையாக நடைபெறும் திருமணங்கள்

திருமண ஸ்தலமாக மாறிய சின்னாறு சோதனைச் சாவடி - எளிமையாக நடைபெறும் திருமணங்கள்
Published on

கோவில், மசூதி, சர்ச் மண்டபங்களுக்கு அடுத்தபடியாக ஜோடிகளை சேர்த்துவைக்கும் இடமாக மாறியுள்ளது எல்லையோர சோதனை சாவடிகள். அந்தவகையில், திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தமிழக கேரள எல்லைபகுதியில் அமைந்துள்ள சின்னாறு சோதனை சாவடி அருகே மூன்று திருமணங்கள் சாலையிலே எளிமையாக நடைபெற்றுள்ளது.

பொதுவாக அனைத்து மதத்தினரும் தங்களது திருமணத்தை கோவிலிலோ அல்லது சர்ச்சிலோ அல்லது மசூதியிலோ நடத்துவார்கள். அதிலும் பெரும்பாலான மக்கள் தங்களது வசதிக்கேற்ப திருமண மண்டபங்களை பிடித்து திருமணத்தை நடத்துவது வாடிக்கை. ஆனால் கொரோனா வைரஸின் தாக்கம் இருப்பவர், இல்லாதவர், ஏழை, பணக்காரர் என அனைத்து தரப்பு மக்களையும் திருமணத்தை பொருத்தவரை ஒரே நிலையில் தள்ளியுள்ளது என்றால் அது மிகையல்ல. கொரோனா பரவல் அதிகரித்துவரும் சூழலில் மாநிலங்கள் தங்களது எல்லைகளை மூடி உள்ளன.

இந்த நிலையில்தான் தமிழக-கேரள எல்லையான உடுமலையிலிருந்து கேரளா மாநிலம் மூணார் செல்லும் சாலையிலுள்ள சின்னார் சோதனைச்சாவடியில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று மாப்பிள்ளைகளுக்கும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 3 மணமகள்களுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. மாநில எல்லைகளில் போக்குவரத்து இல்லாத காரணத்தாலும் மற்ற மாநிலங்களுக்கு செல்ல அனுமதி கிடைக்காத காரணத்தினாலும் திருமணம் செய்ய முடியாமல் திருமண வீட்டார் தவித்து வந்தனர்.

இதனையடுத்து மாநில எல்லையில் வைத்து திருமணத்தை முடித்து விடலாம் என எண்ணிய பெற்றோர் கேரள மாநில சுகாதாரத்துறை மற்றும் காவல்துறையை நாடியுள்ளனர் அவர்கள் சோதனை சாவடியில் வைத்து திருமணம் நடத்தி வைக்க ஏற்பாடு செய்தனர். இதனைத்தொடர்ந்து தமிழகத்திலிருந்து மாப்பிள்ளைகளை மாநில எல்லைப் பகுதிக்கு வரவழைத்தனர். அங்கு வைத்து திருமணத்தை முடித்து மணமகளை மணமகன் உடன் அனுப்பி வைத்தனர். கேரள மாநிலத்தில் திருமணத்திற்கு மணப்பெண்ணுக்கு மட்டும் அனுமதி அளிப்பதால் உறவினர் யாரும் செல்ல முடியாமல் திருமணத்தை முடித்து வைத்து விட்டு திரும்பி சென்றனர்.

முதலில் கேரள மாநிலம் காந்தலூர் பகுதியைச் சேர்ந்த சுகன்யா என்ற மணப்பெண்ணுக்கு உடுமலை அருகே உள்ள குறிச்சிக்கோட்டை என்ற பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற மணமகனுக்கும் திருமணம் நடைபெற்றது. இரண்டாவதாக காந்தலூர் மிஷன் வயல் பகுதியைச் சேர்ந்த வேதகனி என்ற மணமகளுக்கு அமராவதி நகர் பகுதியைச் சேர்ந்த முத்தப்ப ராஜா என்ற மணமகனுக்கும் திருமணம் நடைபெற்றது. மூன்றாவதாக மூணாறு அருகே உள்ள ஒரு தேயிலை எஸ்டேட்டை சேர்ந்த கஸ்தூரி என்ற மணமகளுக்கும் சென்னையைச் சேர்ந்த நிர்மல் ராஜ் என்ற மணமகனுக்கும் திருமணம் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com