கோவை மாணவி பாலியல் வழக்கு.. குற்றப்பத்திரிகை தாக்கல்! வெளிவந்த வேறொரு கொலைப் பின்னணி?
கோவை கல்லூரி மாணவி கூட்டுபாலியல் வன்கொடுமை வழக்கில் காவல் துறையினர் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். கடந்த மாதம் கோவை விமான நிலைய பின்புறம் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கும்பல், அவரது காதலனை அரிவாளால் தாக்கியது. இந்த வழக்கில் 3 பேர் சுட்டு பிடிக்கப்பட்டனர்.
வழக்கை விரைந்து விசாரித்து ஒரு மாதத்திற்குள் குற்ற பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தி இருந்த நிலையில், 3 பேரையும் காவலில் எடுத்து விசாரித்த காவல் துறையினர், குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்துவிட்டதாக தகவல் அளித்துள்ளனர்.
வெளிவந்த அதிர்ச்சி உண்மை..
கல்லூரி மாணவியின் வாக்குமூலம், தலையில் வெட்டப்பட்ட அவரது ஆண் நண்பர் வாக்குமூலம், நேரடி விசாரணை வாக்குமூலங்கள், பறிமுதல் செய்யப்பட்ட ஆயுத விவரங்கள், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ஏற்கெனவே இருந்த குற்றப்பின்னணி குறித்த தகவல்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் வழக்கில் தொடர்புடைய மூவரும், கோவில் பாளையத்தில் ஆட்டு வியாபாரியை கொலை செய்தது அம்பலமாகியுள்ளதாக தெரிகிறது. அதுதொடர்பாக, அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறையினர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்துள்ளனர்.

