முறைகேடாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

முன்னாள் அமைச்சரும் தற்போதைய அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான கேபி.அன்பழகன் முறைகேடாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
KP Anbalagan
KP Anbalaganpt desk

பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கே.பி.அன்பழகன் கடந்த 2016 முதல் 2021 வரை உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தார். அப்போது அவரது பெயரிலும், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன் ஆகியோர் பெயரிலும் மொத்தம் ரூ.11,32,95,755 ரூபாய் அளவிற்கு வருமானத்துக்கு அதிகமாக முறைகேடாக சொத்து சேர்க்கப்பட்டிருப்பதாக, தருமபுரி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதுதொடர்பாக சென்னை, தர்மபுரி உட்பட தமிழ்நாட்டில் 58 இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில், பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

Kp Anbalagan house
Kp Anbalagan housept desk

மேலும் “கே.பி.அன்பழகன் அவரது உறவினர்களான ரவிசங்கர், சரவணன், சரவணகுமார் மற்றும் நெருங்கிய கூட்டாளிகளான ஊ.மாணிக்கம், ஆ.மல்லிகா மற்றும் எஸ்.எஸ்.தனபால் ஆகியோர் உடந்தையுடன் அவரது பெயரிலும், அவரது குடும்பத்தினர் பெயரிலும் நிலங்கள், தொழில் முதலீடு, வங்கி இருப்புகள், நிலம், இயந்திர தளவாடங்கள், ஆபரணங்கள், வாகனங்கள் என சொத்துக்களாக வாங்கியுள்ளார். மேலும் முறைகேடாக பெற்ற பணத்தை அவருக்கு சொந்தமான சரஸ்வதி பச்சையப்பன் கல்வி அறக்கட்டளைக்கு அனுப்பியதன் வழியாக ரூ. 45,20,53,363-ஐ வருமானத்திற்கு அதிகமாக சொத்தாக சேர்த்துள்ளார்” என்றும் கூறப்பட்டது. இதுதொடர்பாக வழக்கும் பதியப்பட்டது.

அந்த வழக்கின் விசாரணை முடிக்கப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் அப்பாபுவிடம் ஆணை பெறப்பட்டது. அதன்படி இன்று தருமபுரி சிறப்பு நீதிபதி தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. அப்போது மேற்படி குற்றம் சாட்டப்பட்ட 10 நபர்கள் மற்றும் சரஸ்வதி பச்சையப்பன் கல்வி அறக்கட்டளை மீது ஊழல் தடுப்பு சட்டப்பிரிவின் அடிப்படையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com