கேபிள் டிவி சேனல்களும்.. புதிய கட்டணங்களும்.. - டிராய் சொல்வது என்ன?
வரும் ஜனவரி 31ஆம் தேதியோடு தற்போது கேபிள் டிவி சேவை முறை முடிவடைந்து, புதிய முறை நடைமுறைக்கு வருகிறது.
டிவி பார்க்கும் மக்களுக்கு தற்போதுள்ள ஒரு பெரும் குழப்பமாக இருப்பது, புதிய கட்டணமுறை என்ன ? என்பதுதான். வருகின்ற 31ஆம் தேதி முதல் அனைத்து சேனல்களுக்கும் தனித்தனியே கட்டணம் செலுத்த வேண்டும் என அண்மையில் டிராய் சார்பில் அறிவிப்பு வெளியாகியது. அத்துடன் 31ஆம் தேதிக்குள் மக்கள் தங்கள் சேனல்களை தேர்வு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தை பொறுத்தவரையில் இதுவரை கேபிள் டிவி வாடிக்கையாளர்களுக்கு, சேனல்களை தேர்வு செய்யும் விண்ணப்பமோ அல்லது மெசேஜ் மூலம் விண்ணப்பமோ வழங்கப்படவில்லை என்பது ஒருமித்த கருத்தாக உள்ளது.
இதற்கு முன்னர், டிராய் அறிவித்த முறைப்படி வாடிக்கையாளர்களுக்கு ரூ.153 கட்டணத்தில் 100 இலவச சேனல்கள் வழங்கப்படும் எனப்பட்டுள்ளது. ஆனால் இதில் 25 சேனல்கள் டிடி சேனல்கள். மீதமுள்ள 50 சேனல்கள் இலவச சேனல்கள். அவை மொழிக்கேற்றவாறு வழங்கப்படும். மீதமுள்ள 25 சேனல்களை கட்டண சேனல்களாகும். ஆனால் அவற்றை இலவச சேனல்களை குறிப்பிட்டு மாற்றிக்கொள்ள முடியும். அதேசமயம் ஒரு ஹெச்டி சேனலை தேர்வு செய்தால், அது இரண்டு இலவச சேனல்களுக்கு சமம். இந்த ரூ.153ல் ஜிஎஸ்டி வரியும் அடங்கும். இதற்கு மேற்கொண்டு சேனல்களை பார்க்க விரும்புவோர், சேனல்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட விலையை கட்டணத்தில் சேர்த்து பார்த்துக்கொள்ளலாம்.
இந்திய அளவில் உள்ள 887 சேனல்களில் இதுவரை 550 சேனல்கள் இலவச சேனல்களாக இருந்தன. ஒரு வாடிக்கையாளருக்கு குறைந்தபட்சம் 400-500 சேனல்கள் இலவசமாக வழங்கப்பட்டு வந்தன. இத்தனை சேனல்களுக்கும் சேர்த்து குறிபிட்ட தொகை கட்டணமாக கேபிள் ஆபரேட்டர்களை பொறுத்து வசூலிக்கப்பட்டது. இதனை ஒழுங்கு படுத்தும் வகையில் மொழிக்கேற்றவாரு 100 சேனல்களை இலவச சேனல்களாக குறைத்துள்ளது டிராய்.
அதேசமயம் டாடா ஸ்கை போன்ற டீடிஎச் சேவைகளுக்கு இதன்மூலம் எந்தப் பதிப்பும் ஏற்படாது எனப்படுகிறது. அதேசமயம் நிர்ணயம் செய்யப்பட்ட தொகையை விட, கேபிள் சர்வீஸ் எனக் கூடுதலாக எந்தத் தொகையும் வாங்கக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.