சென்னை|16-வது ஆண்டில் அண்ணா நூற்றாண்டு நூலகம்.. ஏற்படப்போகும் மாற்றங்கள் என்ன?
தலைமுறை தலைமுறையாக அறிவார்ந்த சமூகத்தை வளர்த்தெடுக்கும் முயற்சியாக தொடங்கப்பட்ட, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம், 15 ஆண்டுகளை நிறைவு செய்து ‘ஸ்வீட் 16’ கொண்டாட தயாராகியிருக்கிறது. இந்நிலையில், அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மேம்பாடு செய்யும் பணிகளும் நடைபெறவிருக்கின்றன.
தனது புதிய அத்தியாயத்தை தொடங்கவிருக்கும் அண்ணா நூற்றாண்டு நூலகம் 2010ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி சென்னை கோட்டூர்புரத்தில் அப்போதைய முதல்வர் கருணாநிதி, தனது தலைவர் அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டைக் கொண்டாட, அவரது பெயரில் நிறுவியதுதான், இந்த அறிவு மையம்.
வெறுமனே புத்தகங்களை அடுக்கிவைத்து, வாசிக்கச் சொல்லாமல், அறிவுலகில் சஞ்சரிப்பதற்கான அனைத்து வழிகளையும் திறந்துவிட்டது இந்த நூலகம்.
”வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம் புத்தகங்களுக்கு கொடுக்கப்பட வேண்டும்” என்ற அண்ணாவின் வாசகத்துடன் தொடங்கும் இந்த நூலகம் எட்டு மாடிகளுக்கு இலக்கியப் பிரிவு, போட்டித்தேர்வுகள் பிரிவு, புத்தக வெளியீட்டு அரங்குகள், பார்வையற்றோருக்கான பிரெய்லி பிரிவு மற்றும் தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் கொண்டாடும் வகையில் உருவாக்கப்பட்ட செந்தமிழ் சிற்பிகள் அரங்கம் ஆகியவற்றை கொண்டு 9 தளங்களுடன் விரிந்து கிடக்கிறது அண்ணா நூற்றாண்டு நூலகம்.
தொடர்ந்து, மாணாக்கருக்கு முக்கியமான கல்வி ஆதார மையமாகவும், குழந்தைகளுக்கு வாசிப்பை அறிமுகப்படுத்தும் வழிகாட்டியாகவும் பொழுதுபோக்குத் தளமாகவும் செயல்பட்டு வருகிறது. 2010 ஆம் ஆண்டு தொடங்கி, 15 ஆண்டுகளில், ஏராளமான இளைஞர்களின் வாழ்க்கையை உயர்த்திய ஏணியாக திகழ்கிறது அண்ணா நூற்றாண்டு நூலகம் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மாற்றங்களுக்குத் தயாராகும் அண்ணா நூற்றாண்டு நூலகம் !
இந்த நிலையில், அண்ணா நூற்றாண்டு நூலகம், இப்போது ஒரு நவீன அறிவு மையமாகும் நோக்கில் புதிய மாற்றங்களுக்கு தயாராகி வருகிறது. இதை ஒரு நவீன அறிவு மையமாக மாற்றும் பணிகளில் கல்வித் துறை இயங்கி வருகிறது. TED பேச்சுகள், கலாச்சார நிகழ்ச்சிகள் போன்றவை இடம்பெறும் வகையில், நூலக வளாகத்தை மேம்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 1,200 இருக்கை கொண்ட அரங்கம், திறந்தவெளி திரையரங்கம் ஆகியவை புதுப்பிக்கப்படுகின்றன.
அறிவியல் பூங்கா, உணவகம், குழந்தைகளுக்கான வாசிப்புப் பகுதியில் நவீன வசதிகள், புதிய வாசகர் அடையாள அட்டைகள், QR கோடு வசதி, வலைதளத்தில் முன்பதிவு வசதி ஆகியவை முக்கிய அம்சங்களாக இடம்பெறுகின்றன. ஏஐ முறையிலும் ஏராளமான வசதிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இந்த நூலகம் தற்போது கல்வி மற்றும் சமூகப் பங்களிப்புக்கான முக்கியமான மையமாக மாறி வருகிறது. இது, தமிழ்நாடு அரசு நூலக சேவையின் ஒரு முன்னோடி முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.